3 Children Loss Their Parents on Kallakurichi Illicit Death Case (Photo Credit: @SuryahSG X)

ஜூன் 21, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் வரை தற்போது வரை பலியாகி இருக்கின்றனர். இவர்களின் உடல்கள் அடுத்தடுத்து உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இதனால் கருணாபுரம் பகுதி முழு அளவிலான சோகத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில், அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் நேரடியாக அப்பகுதிக்கு சென்று தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ரூ.10 இலட்சம் இழப்பீடு:

மாநில அரசு சார்பில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ரூபாய் 10 லட்சம் இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இன்னும் 70-க்கும் அதிகமானோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. மேலும், கள்ளச்சாராயம் குடித்துவிட்டு பயத்தினால் குடும்பத்தினரிடம் கூட கூறாமல் இருந்து வரும் நபர்களும் அடுத்தடுத்து உடல் நலக்குறைவை சந்தித்து இன்றும் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு வருகின்றனர்.

விலை குறைவால் கள்ளச்சாராய விற்பனை அமோகம்:

ரூ.140 க்கு தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படும் நிலையில், அதனை விட மிகக் குறைந்த விலையில் ரூபாய் 50 முதல் 80 வரை கள்ளச்சாராயம் கிடைப்பதால், அதனை வாங்கி பலரும் அருந்தியது தெரியவந்துள்ளது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கள்ளச்சாராய வியாபாரி கோவிந்தராஜ், அவரது மனைவி ரேவதி, தாய் ஜோதி, சகோதரர் தாமோதரன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான சின்னத்துரை என்பவரை தேடி அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து மொத்தமாக 900 லிட்டர் மெத்தனால் விஷச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. PM Modi on Yoga Day: 177 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யோகாசனம்; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.! 

இதனிடையே தங்களது உறவினர்கள், தந்தை என குடும்பத்தினரை இழந்த சோகத்தில் கர்ணாபுரம் பகுதியே தவித்து வருகிறது. திரும்பும் இடமெல்லாம் துக்க நிகழ்வு நடைபெறுவதால் கள்ளக்குறிச்சி மாவட்டமும், தமிழகமும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது. இந்நிலையில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த தாய்-தந்தையான பெற்றோர் இருவரும் விஷ சாராயம் குடித்து பலியான சோகம் நடந்துள்ளது.

பிள்ளைகளை அனாதையாக்கிய போதை பெற்றோர்:

கர்ணாபுரம் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 37), சுரேஷின் மனைவி வடிவழகி (வயது 35). சுரேஷ் பெயிண்டனாக பணியாற்றியவரும் நிலையில், அவரது மனைவி வடிவழகி கட்டுமான தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தினக்குலியான இருவரும் வேலைக்கு சென்று வந்தால் மட்டுமே அன்றைய பிழைப்பு நடக்கும் என்ற நிலை இருந்துள்ளது. இந்த தம்பதிக்கு கோகிலா, ராகவன், ஹரிஷ் என ஒரு பெண் குழந்தை, இரண்டு ஆண் குழந்தை என மூன்று பிள்ளைகள் இருந்துள்ளனர். விஷ சாராயம் அருந்தி பலியானவர்களில் இவர்களின் பெற்றோரும் இருக்கின்றனர். பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ள குழந்தைகளுக்கான கல்வி செலவு, எதிர்கால நலன் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை அரசியல் இயக்கங்களால் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளன.