Kanchipuram Encounter 27 Dec 2023 (Photo Credit: @ANI X)

டிசம்பர் 27, காஞ்சிபுரம் (Kanchipuram Crime News): காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவர்மேடு பகுதியைச் சார்ந்தவர் சரவணன் என்ற பிரபா. உள்ளூரில் ரவுடியாக வலம் வந்த பிரபாவின் மீது, அங்குள்ள காவல் நிலையங்களில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவர் அப்பகுதியைச் சார்ந்த தேமுதிக பிரமுகர் சரவணன் மற்றும் அவரது சகோதரர் செந்தில் ஆகியோரின் கொலையில் முக்கிய குற்றவாளியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.

கத்தி எடுத்தவர் கத்தியால் அழித்தார்: இவ்வழக்கு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பிரபா, ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். நேற்று கையெழுத்திடுவது தொடர்பாக நீதிமன்றத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த நிலையில், அவரை வழியில் வெள்ளை நிற காரில் வந்து இடைமறித்த 4 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது. இந்த சம்பவம் அப்போது மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

களமிறங்கிய தனிப்படை அதிகாரிகள்: கொலை சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காஞ்சிபுரம் காவல்துறையினர், உடனடியாக 2 தனிப்படையை அமைத்து கொலை கும்பலை தேடி வந்தனர். பிரபாவின் உடலும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, வெள்ளை நிற கார் அங்குள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் சுற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. Girl Gang Raped: இளம்பெண் காரில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நால்வர் கும்பலால் அரங்கேறிய கொடூரம்..! 

கையெறி குண்டு வீசிய ரௌடி கும்பல்: இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குற்றவாளிகளை கண்டறிந்தனர். அவர்களை கைது செய்ய முற்படும்போது, காவலர்களின் பிடியிலிருந்து தப்பிக்க முயற்சித்த கும்பல், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தி இருக்கின்றது. நிலைமையை உணர்ந்த காவல்துறையினர் குற்றவாளிகளை சரணடைய கூறி இரண்டு முறை வானை நோக்கி துப்பாக்கி சூடும் நடத்தி இருக்கின்றனர்.

என்கவுண்டரில் இருவர் பலி: அதிகாரிகளிடம் சரணடைய மறுத்த கும்பல், தொடர்ந்து தப்பி செல்லும் எண்ணத்தில் இருந்துள்ளது. காவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால், அதிகாரிகள் தங்களின் பாதுகாப்பு கருதி ரவுடிகளை என்கவுண்டர் செய்தனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ரகு என்பவர் என்கவுண்டரில் பலியானார். அவருடன் இருந்த அடையாளம் தெரியாத கூட்டாளி குறித்து விசாரணை நடந்து வருகிறது. எஞ்சியோருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னரே பிரபாவின் கொலைக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.