Uthangarai Accident on 27-Dec-2024 (Photo Credit: @Sunnewstamil X)

டிசம்பர் 27, ஊத்தங்கரை (Krishnagiri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டயம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசித்து வரும் மக்கள், மேல்மருவத்தூர் பராசக்தி கோவிலுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து புறப்பட்டனர். இவர்கள் 3 பேருந்துகளில் இன்று அதிகாலை மேல்மருவத்தூர் நோக்கி பயணம் செய்தனர்.

போட்டா-போட்டி பயணம்:

அப்போது, வழியில் மூன்று பேருந்துகளும் ஒன்றையொன்று முந்தியபடி போட்டிபோட்டு பயணம் செய்துள்ளன. இந்நிலையில், இறுதியாக வந்த பேருந்து ஒன்று, முன்னால் சென்றுகொண்டு இருந்த பேருந்தை முந்த முற்பட்டுள்ளது. இந்த பேருந்தில் எட்டயம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் நபர்கள் இருந்துள்ளனர். Rain Alert: மதியம் 1 மணிவரையில் 13 மாவட்டங்களில் மழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் முந்திச்செல்லும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 52 பெண்களில் 40 பேர் காயமடைந்தனர்.

காவல்துறை விசாரணை:

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உள்ளூர் மக்கள், மக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து ஊத்தங்கரை காவல்துறையினர் & தீயணைப்பு மீட்பு படையினரும் நிகழ்விடம் விரைந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மழை காரணமாக சாலைகளில் நீர் இருந்த நிலையில், பேருந்து ஒன்றையொன்று வேகத்தில் முந்திச் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்தது அம்பலமானது.