
பிப்ரவரி 15, முட்டம் (Mayiladuthurai News): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முட்டம் வடக்குத்தெரு பகுதியில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை. இவர்கள் சாராய வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சாராய வியாபாரத்தை கண்டிக்கும் நபர்களை அவதூறாக பேசுவது, தாக்குதல் நடத்துவது இவர்களின் வாடிக்கையான செயல் என உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது.
சாராய விற்பனை:
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் சார்பில், கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் விற்பனையை ஒழிக்கும்பொருட்டு அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ஜாமினில் அவர்கள் தற்போது வெளியே வந்தனர். ஜாமினில் வந்தவர்கள் மீண்டும் தங்களின் பகுதியில் சாராய விற்பனையை தொடங்கி இருக்கின்றனர்.
சிறுவனை தாக்கியதாக தகவல்:
இதனை கவனித்த அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னீக் கல்லூரி மாணவரான சிறுவன் ஒருவர், சாராய வியாபாரிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அவரை அவதூறாக பேசி, தாக்கி சாராய கும்பல் அனுப்பி வைத்துள்ளது. இந்த விஷயம் கல்லூரி மாணவர் ஹரி சக்தி, பட்டதாரி இளைஞர் ஹரிஷ் ஆகியோருக்கு தெரியவந்தது. இதனால் இருவரும் சென்று சாராய வியாபாரிகளான மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை ஆகியோர் கும்பலிடம் என்று வாக்குவாதம் செய்துள்ளனர். Today Gold Rate இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைவு.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
இரட்டைக்கொலை:
இந்த வாக்குவாதத்தில் இருதரப்பு கருத்து மோதல் உண்டாகவே, ஆத்திரமடைந்த கள்ளச்சாராய கும்பல் ஐவர், ஹரிஷ் மற்றும் ஹரி சக்தி ஆகியோரை கடுமையாக தாக்கி கொலை செய்தனர். நேற்று இரவு கொலை சம்பவம் நடந்த நிலையில், தகவல் அறிந்த காவல்துறையினர் பலியான இளைஞர்களின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இளைஞர்கள் கொலையானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கள்ளச்சாராய விற்பனையாளர்கள் வீட்டுக்கு சென்று பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
உறவினர்கள் போராட்டம்:
மேலும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதனை வாங்க மறுத்து அவர்கள் போராட்டமும் செய்து வருகின்றனர். சாராய வியாபாரிகள் மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை என 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 2 பேரை கைது செய்யும் வரையில் உடலை வாங்கமாட்டோம் என போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை விளக்கம்:
இரண்டு தரப்பும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதனிடையே, 2 இளைஞர்கள் கொலைக்கும், கள்ளச்சாராய விற்பனைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இருதரப்புக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இதனாலேயே கொலை நடைபெற்றது. வாக்குவாதத்தில் தொடங்கிய இவர்களின் தகராறு, நேற்று கொலையில் முடிந்துள்ளது என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.