செப்டம்பர் 27, குமாரபாளையம் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம், பச்சாம்பாளையம் பகுதியில், 2 கார்கள், 4 இருசக்கர வாகனங்களை இடித்துவிட்டு, ராஜஸ்தான் மாநில பதிவெண்கொண்ட கண்டைனர் லாரி ஒன்று நிற்காமல் செல்வதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அதிகாரிகள் கன்டைனரை துரத்திச்சென்றபோது, அவர்களையும் பொருட்படுத்தாமல் கண்டைனர் பயணித்து இருக்கிறது. இதனையடுத்து, அடுத்தடுத்த பகுதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வெப்படை பகுதியில் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
என்கவுண்டரில் ஒருவர் பலி:
அப்போது, வாகனத்தில் இருந்த நால்வர் கும்பல் கடப்பாரை, கற்கள் வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இருந்து அதிகாரிகள் தப்பிக்க துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், நால்வரில் 2 பேர் மீது குண்டுகள் பாய்ந்தது. 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கண்டைனர் லாரி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி என்கவுண்டரில் உயிரிழந்தார். மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார். TN CM Meets with PM Modi: பிரதமருடன் நேரில் சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின்..!
ரூ.67 இலட்சம் கொள்ளையடித்த குற்றவாளிகள்:
விசாரணையில், கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில், இன்று அதிகாலை 3 எஸ்.பி.ஐ ஏடிஎம் கேஸ் வெல்டர் கொண்டு அறுக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.67 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த பணத்தை காரில் பதுக்கி, அதனை கண்டைனர் லாரி மீது ஏற்றி ஐவர் கும்பல் பயணம் செய்துள்ளது. இந்த கும்பல் நாமக்கல் பகுதியில் வந்தபோது விபத்து ஏற்படவே, லாரியை நிறுத்தினால் சிக்கிக்கொள்வோம் என நினைத்து தொடர்ந்து பயணித்துள்ளது. பின் அதிகாரிகள் லாரியை மடக்கி இருக்கின்றனர் என்பது அம்பலமானது.
எஸ்.பி விளக்கம்:
திருச்சூர் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்டங்களை கண்டறிந்து, அண்டை மாநிலத்திலும் தகவலை தெரிவித்து இருக்கின்றனர். அந்த சோதனையில் நாமக்கல் சுங்கச்சாவடியில் லாரி வந்தபோது, அவர்கள் நிற்காமல் சென்றுள்ளனர். இதனால் அடுத்தடுத்து தகவல் பரிமாறப்பட்டு லாரி பிடிக்கப்பட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த கும்பலாக இவர்கள் ராஜஸ்தான் - ஹரியானா மேவாட் பகுதியை மையமாக வைத்து செயல்படுபவர்கள் என நாமக்கல் மாவட்ட எஸ்.பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்து இருக்கிறார். திருச்சூர் மாவட்ட எஸ்.பி இளங்கோ தலைமையிலான தனிப்படை குழு, நாமக்கல் விரைகிறது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன .