ஆகஸ்ட் 24, கண்ணகி நகர் (Chennai News): சென்னையில் உள்ள கண்ணகி நகர், 5வது தெருவில் வசித்து வருபவர் ரவி. இவரின் மனைவி வரலட்சுமி (வயது 30). ரவிக்கு உடல்நலக்குறைவு இருப்பதால் பணிக்கு செல்ல முடியாது. இதனால் வரலட்சுமி சென்னை மாநகராட்சியின் ஒப்பந்த நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து வேலைக்கு சென்றுவிடுவார். அங்குள்ள 11வது தெரு வழியாக அவர் தினமும் வேலைக்கு செல்வார் என கூறப்படுகிறது. இங்குள்ள பகுதிகளில் தமிழ்நாடு அரசின் மின்வாரியம் சார்பில் புதைவட கம்பிகள் அமைக்கப்பட்டு மின்சார சேவை வழங்கப்படுகிறது. ஒருசில இடங்களில் மின்சார கம்பிகளை பூமிக்கடியில் புதைக்காமல், அப்படியே வெளிப்புறத்தில் இருந்தபடி மின்சேவையை வழங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனை சரி செய்யக்கூறி இப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்களை வழங்கி இருந்தனர். ஆனால், எந்த பலனும் இல்லை. தங்களிடம் புதிய கம்பிகள் இல்லை, வீட்டுக்கு ரூ.300 வசூல் செய்து தந்தால் மாற்றுகிறோம் என அலட்சியமாக இருந்துள்ளனர். சேலம்: வளர்ப்பு நாய் கடித்த இளைஞர் ரேபிஸ் தொற்று பாதித்து ஓராண்டு கழித்து பலி.. செல்லப்பிராணி பிரியர்களே கவனம்.!
மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் பெண்ணின் உயிர் பறிபோனது - உறவினர்கள்:
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 23) காலை சுமார் 4 மணியளவில் வேலைக்கு புறப்பட்டுச் சென்ற வரலட்சுமி, புதைவட கம்பி சேதமடைந்த வீதி வழியே நடந்து சென்றார். மழை பெய்த காரணத்தால் நீரில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதுதெரியாமல் அவ்வழியாக சென்ற வரலட்சுமி மின்சாரம் தாக்கி தண்ணீரில் விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், சுமார் 1 மணிநேரம் வரை அழைப்பை எடுக்காமல் அலைக்கழித்தவர்கள், தகவல் தெரிந்தபின் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். அதன்பின்னரே வரலட்சுமியின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது. சுமார் 1 மணிநேரம் மக்கள் மின்சார தாக்குதல் தொடர்ந்த காரணத்தால் வரலட்சுமியின் உடல் துடிதுடிப்பதை கண்டு கண்கலங்கி காத்திருந்தனர். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த தகவலை அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும், மின்வாரிய பணியாளர்களின் முழு அளவிலான அலட்சியமே குடும்பத்துக்காக ஒவ்வொரு நாளும் ஓய்வின்றி உழைக்க சென்ற பெண்ணின் உயிரை பறித்துவிட்டது என ஆதங்கம் தெரிவிக்கின்றனர். மின்கசிவு குறித்து பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என கண்ணீர் விடுகின்றனர்.
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் அலட்சியத்தால் நடந்துள்ள இந்த பெரும்சோகம்.