Palladam Honor Killing Case (Photo Credit: Facebook)

ஏப்ரல் 02, பல்லடம் (Tirupur News): திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் (Palladam) அருகே பருவாய் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர், வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விசைத்தறி தொழிலாளி. இத்தம்பதிக்கு வித்யா என்ற மகளும், சரவணன் என்ற மகனும் உள்ளனர். வித்யா கோவையில் உள்ள அரசு கல்லுாரியில் எம்ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், திருப்பூர் விஜயாபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவந்த நிலையில், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. Teenager Stabbed To Death: போதை ஊசி போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை.. நண்பர்கள் வெறிச்செயல்..!

மாணவி மர்ம மரணம்:

இந்நிலையில், கடந்த மார்ச் 30ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பீரோ தலையில் விழுந்ததில் உயிரிழந்ததாக கூறி அவரது குடும்பத்தினர் வித்யாவின் உடலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். இதுகுறித்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல் தண்டபாணி குடும்பத்தினர் வித்யா உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர். தகவல் அறிந்த பருவாய் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை செய்ய வேண்டும் எனவும் காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி:

அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல்லடம் வட்டாட்சியர் சபரி கிரி தலைமையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள் உதவியுடன் உடலை தோண்டி எடுத்து சுடுகாட்டிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதில் வித்யா தலையில் படுகாயம் இருப்பது தெரியவந்தது. மேலும், அவரது உடல் பாகங்களை சோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். உயிரிழந்த வித்யாவின் தந்தை தண்டபாணி, அண்ணன் சரவணன் ஆகிய இருவரையும் விசாரணைக்காக கவனயக்கன்பாளையம் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

ஆணவக்கொலை:

இதனிடையே, கல்லூரி மாணவி வித்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது காதலனும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரை காதலித்ததால், அண்ணனே தங்கையை ஆணவக்கொலை (Honor Killing) செய்தது அம்பலமானது. இந்த ஆணவக்கொலை விவகாரத்தில், மாணவியின் தந்தை, அவரது அண்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.