டிசம்பர் 30, புதுக்கோட்டை (Pudukkottai News): திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் குழு, தென்மாவட்டங்களில் இருக்கும் கோவில்களுக்கு சென்று வந்துள்ளது. அதேபோல, வெவ்வேறு பகுதிக்கு சென்று ஊர் திரும்பிய கார், வேன் ஆகிய வாகனங்கள் நேற்று நள்ளிரவு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நமணசமுத்திரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையோரம் இருக்கும் தேநீர் கடையில் வாகனத்தை நிறுத்தி இருக்கின்றனர்.
சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி: பக்தர்களில் சிலர் வாகனத்தில் இருந்து இறங்கி கடையில் நின்றுகொண்டு இருந்தனர். ஒருசிலர் வாகனத்திலேயே இருந்துள்ளனர். அப்போது, அவ்வழியே அரியலூர் மாவட்டத்தில் இருந்து சிவகங்கை நோக்கி, சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி பயணித்துள்ளது. இந்த லாரி தேநீர் கடைக்கு முன்னதாக திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
நொடியில் நடந்த சோகம்: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பக்தர்களின் வாகனங்கள் மீது அதிவேகத்தில் மோதியது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்தவர்கள் மற்றும் வாகனத்திற்கு அருகே நின்றவர்கள் என 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். RIP Captain Vijayakanth: அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட கேப்டன் விஜயகாந்த்.. சோகத்தில் தமிழகம்..!
அலறித்துடித்த மக்கள் மீட்பு: இந்த விபத்து குறித்து உடனடியாக மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
விசாரணை: விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் பக்தர்கள் குழுவினர் விபத்தில் சிக்கி பலியான சோகம், அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.