ஜூலை 29, சென்னை (Festival News): ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு என பல விசேஷமான நாட்களை ஆடி மாதம் கொண்டுள்ளது. ஆடி மாதத்தின் மிக முக்கிய விசேஷங்களுள் ஒன்றாக ஆடிப்பெருக்கு (Aadi Perukku 2025) இருக்கிறது. ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், மங்களகரமான நாளாகவும் ஆடி 18 உள்ளது. தமிழ் மாதமான ஆடியின் 18 வது நாளில் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு 2025ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 03ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.
ஆடி 18 சிறப்பு (Aadi 18 Special) :
ஆடிப்பெருக்கு நன்னாளில் புதிய தொழில் தொடங்குவது, விவசாய பணிகளை தொடங்குவது, புதிதாக திருமணமான ஜோடிகள் தாலி பிரித்து கோர்ப்பது, தொழில் விருத்திக்கான முதலீடுகள் செய்வது என மங்களகரமானவற்றை மக்கள் செய்வர். இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பெருகிக்கொண்டே போகும் என்பது ஐதீகம். நடப்பு ஆண்டிற்கான ஆடிப்பெருக்கு வரும் ஆகஸ்ட் 03ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பெண்கள் நீர் நிலைகளில் வழிபாடு செய்வதும், புதுமணத் தம்பதிகள் தாலி கயிறு மாற்றுவதும் வழக்கம். இந்த செய்தித்தொகுப்பில் ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு மாற்றுவதற்கான நல்லநேரம் மற்றும் முறை குறித்து விவரமாக பார்க்கலாம். Aadi Velli 2025: கடன் தொல்லை தீர.. அம்மன் வீடு தேடி வர.. ஆடி வெள்ளியில் செய்யவேண்டிய பூஜை, விரதம்.!
ஆடிப்பெருக்கு நல்ல நேரம் (Aadi Perukku Nalla Neram) :
ஆடிப்பெருக்கில் சுப காரியங்களை ராகு காலம், எமகண்டம் தவிர்த்து வரும் மற்ற நல்ல நேரங்களில் செய்வது நல்லது. அதன்படி ஆகஸ்ட் 03 மாலை 4:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை ராகு காலமும், மதியம் 12:00 மணி முதல் மதியம் 1:30 வரை எமகண்டமும் இருக்கிறது. அந்த நேரத்தை தவிர்த்து நல்ல நேரமானது காலை 07:45 மணி முதல் 8:45 மணி வரையும், மாலை 3:15 மணி முதல் 4:15 மணி வரையும் இருக்கிறது. இந்த நல்ல நேரங்களில் கடவுளை வேண்டி ஆராதனை செய்து படையலிடுவது குடும்பத்தில் மகிழ்ச்சியை பெருக செய்யும்.
தாலி கயிறு மாற்ற ஏற்ற நேரம் (Thali Kayiru Matrum Nalla Neram):
ஆகஸ்ட் 03ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விசாகம் நட்சத்திரமானது காலை 7:24 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 9:50 மணி வரை இருக்கிறது. தாலி மாற்றுவதற்கான ஏற்ற நேரமாக காலை 7:45 முதல் 8:45 வரையும், மாலை 3:15 முதல் 4:15 வரையும் உள்ளது. ஆடிப்பெருக்கு அன்று காலை 9 மணிக்குள் வழிபாடு முடித்து புதுமண தம்பதிகள் தாலி கயிற்றை மாற்றிக் கொள்ளலாம். அதுபோல சுமங்கலி பெண்கள் தாலி பெருக்கி போடுவதன் மூலம் கணவரின் ஆயுள் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். புதுமண தம்பதிகள் மதியம் 12 மணிக்குள் தாலி மாற்றிக்கொள்வது சிறப்பு. Aadi Perukku 2025: ஆடி 18 கொண்டாடப்படுவது ஏன்? எப்போது?.. நல்லநேரமும், வழிபடும் முறையும்..!
தாலி மாற்றும் முறை (Thali Matrum Murai) :
- ஆடிப்பெருக்கு நல்லநேரத்தில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜை செய்து தாலி கயிற்றை மாற்ற தொடங்க வேண்டும்.
- பெண்கள் தாலி மாற்றும்போது கிழக்கு நோக்கி அமர்ந்து மாற்றுதல் வேண்டும்.
- தாலி கயிறு மாற்றும் போது பாதியில் எழுந்திருக்கக்கூடாது.
- சுமங்கலி பெண்கள், மாமியார், அம்மா, கணவர் என வயதானவர்கள் வீட்டில் இருக்கும்போது தாலி கயிற்றை மாற்ற வேண்டும்.
- மாங்கல்ய மஞ்சள் கயிற்றை அம்மன் பாதத்தில் வைத்து கணவன் தனது மனைவிக்கு கட்டிவிட வேண்டும்.
- புதுமண தம்பதிகள் இறைவனை வணங்கி பெற்றோரிடமும் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
- அதுபோல ஆடி 18 நன்னாளில் சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருட்களை தானமாக வழங்குவதால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.