தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியை.. மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!

சிவகங்கையில் மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியை ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தோப்புக்கரணம் போடவைத்த ஆசிரியை.. மாணவிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!
State Human Rights Commission Tamil Nadu (Photo Credit: YouTube)

ஏப்ரல் 24, சிங்கம்புணரி (Sivaganga News): சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள எஸ்.எஸ்.கோட்டை திருமாநகரைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வி. இவரது மகள், எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக சித்ரா என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். மயோனைஸ் விற்பனைக்கு அதிரடி தடை.. அரசு கூறும் காரணங்கள் என்ன? விபரம் இதோ..!

400 தோப்புக்கரணம்:

இந்நிலையில், மாணவி வீட்டுப்பாடம் எழுதவில்லை எனக்கூறி, 400 முறை தோப்புக்கரணம் (Thoppukaranam) போட வைத்துள்ளார். இதில், கீழே விழுந்த சிறுமியை, பள்ளி தோழிகள் சைக்கிளில் அழைத்துவந்து வீட்டில் விட்டுச் சென்றனர். இதனைத்தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், பலமுறை தோப்புக்கரணம் போட்டதால் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மனித உரிமை மீறல்:

இந்நிலையில், ஆசிரியர் சித்ரா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மாணவியின் தாயார் பாண்டிசெல்வி புகார் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன், இந்த புகார் மனு மீது தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ஆசிரியர் சித்ராவுக்கு பலமுறை வாய்ப்பு அளித்தும், அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை, மேலும் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. ஆவணங்களின்படி, ஆசிரியை சித்ரா மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. எனவே, மனுதாரர் பாண்டிசெல்விக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். அதை ஆசிரியை சித்ராவிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக் கொள்ளலாம் என அவர் உத்தரவிட்டார்.

(The above story first appeared on LatestLY on Apr 24, 2025 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).