ஜூலை 28, நெல்லை (Tirunelveli News): தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் கவின்குமார் (வயது 26). இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமாரை, நேற்று (ஜூலை 27) வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று, பட்டப்பகலில் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை (Murder) செய்துவிட்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். Breaking: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தலையில் வெட்டிப்படுகொலை.. தாராபுரத்தில் பயங்கரம்.!
வாலிபர் வெட்டிக்கொலை:
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், கவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர், பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது சுர்ஜித் (வயது 24) என்பது தெரியவந்துள்ளது. மேலும், சுர்ஜித்தின் தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் எஸ்ஐ ஆக பணிபுரிவதும் தெரியவந்தது. இதனையடுத்து, சுர்ஜித்தை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
பரபரப்பு வாக்குமூலம்:
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில், 'எனது அக்காவும், கவினும் ஒன்றாக பழகி வந்தனர். அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எனது அக்காவுடன் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. எனது அக்கா தனியார் சித்த மருத்துவ மையத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு அடிக்கடி சென்று கவின் பேசி பழகி வந்தார். இதனை நான் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இந்நிலையில், நேற்று (ஜூலை 27) அதேபோல் மருத்துவமனைக்கு அவர் சென்றார். நானும் அவரை பின்தொடர்ந்து சென்றேன். பின்னர், அவரை தனியாக அழைத்து எச்சரிக்கை விடுத்தேன். ஆனால், அவர் பேசுவதை நிறுத்தமுடியாது என்று திமிராக கூறியதால் ஆத்திரத்தில் அவரை வெட்டிக்கொலை செய்தேன் ' என்று கூறியுள்ளார்.
போலீஸ் விசாரணை:
இதனையடுத்து, பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, இந்த கொலை சம்பவத்திற்கு சுர்ஜித்தின் பெற்றோர் தான் காரணம் என்றும், பல்வேறு அமைப்பினர் பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தினருடன் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.