TN Budget 2024: மாணவர்கள், பெற்றோர், ஏழை-எளிய மக்களை மகிழ்விக்கும் அதிரடி அறிவிப்புகள்.. தமிழ்நாடு பட்ஜெட் 2024: முழு விபரம் இதோ.!
TN Budget 2024 (Photo Credit: @DIPR X)

பிப்ரவரி 19, சென்னை (Chennai): தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிப்ரவரி 19 ம் தேதியான இன்று தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் (TN Budget 2024 - 2025) செய்யப்பட்டது. 2024 - 2025 ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் (Thangam Thennarasu), இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. மாநில நிதியமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், அமைச்சர் தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பிப்ரவரி 19 காலை 10 மணியளவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை (TN Budget) தொடர்ந்து நாளை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் (M.R.K. Panneerselvam) சார்பில் வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி 20 மற்றும் 21ம் தேதி பட்ஜெட் விவாதங்கள் நடைபெறும். 22ம் தேதி அதற்கான பதில் அமைச்சர்கள் சார்பில் வழங்கப்படும். இந்த நிதிநிலை அறிக்கையில் சமூகநீதி, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம், தமிழ்நாடு இளைஞர்களை சாதனையாளர்களை மாற்றுதல், சமநிலை பெண் முன்னேற்றம், நிலையான எதிர்காலம், தமிழ்மொழி பண்பாடு ஆகிய 7 அம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் மற்றும் அவர் பேசிய விபரம் பின்வருமாறு.,

தமிழ் மொழிக்காக அசத்தல் திட்டங்கள்: கருணையும், நோக்கத்தை நிறைவேற்ற தேவையான நிதிஒதுக்கீடும் முறையாக அமைந்ததால் நமது மாநிலம் முன்னேற்றம் அடைந்தது. கருணையும், நிதியும் ஒன்றாக சேரும்போதெல்லாம் தமிழர் தலைநிமிர்த்தனர், தமிழ்நாடு வளம்பெற்றது. தமிழர்களின் ஒற்றுமை, அரசியல் நேர்மை, குடிமக்கள் உரிமை, வணிக சிறப்பு, சமய நல்லிணக்கம், பெண்ணியம், பசிப்பிணி ஒழிப்பு போன்ற சமூக சிந்தனைகளை எடுத்துரைக்கும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவரை 25 மொழிகளில் மொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இலக்கிய படைப்புக்களை உலகளவில் எடுத்துச்செல்லவும், சென்னை பன்னாட்டு புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. இரண்டாவது ஆண்டாக தொடர்ந்து அது நடைபெறுகிறது. இலக்கிய புத்தகங்களை மொழிபெயர்க்க 400 க்கும் அதிகமான தமிழ் நூல்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. ரூ.5 கோடி செலவில் கூடுதலாக 600 நூல்களை மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.

வரலாறுகளை தெரிந்துகொள்ள அகழாய்வுகள்: தமிழ்நாட்டில் வசித்து வரும் பழங்குடியினர் மொழி வடிவத்தை எதிர்கால தலைமுறை தெரிந்துகொள்ளும் வகையில், அவை ரூ.2 கோடி செலவில் பதிவு செய்யப்பட்டு பதுயுகக்கப்படும். கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும். சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தங்கம் சென்னையில் நடத்தப்படும். தென்காசி திருமலாபுரம், புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டை, விருதுநகர் வெம்பக்கோட்டை, கடலூர் மருங்கூர் உட்பட 8 இடங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெறும். வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களின் வாழ்வியலை உறுதிப்படுத்தவும் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கிராமம் & ஊரக பகுதிகள் மேம்பாடு: குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 8 இலட்சம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டி வழங்கப்படும். முதற்கட்டமாக தலா ரூ.3.25 இலட்சம் செலவில், 1 இலட்சம் வீடுகள் நடப்பு நிதியாண்டில் கட்டி வழங்கப்படும். கலைஞரின் கனவு இல்லம் ரூ.3500 கோடி செலவில் செயல்படுத்தப்படும். கிராம சாலைகள் அமைப்பு மற்றும் மேம்பாட்டுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் வாயிலாக 2000 கி.மீ சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குக்கிராமமும் தன்னிறைவை பெற, 2482 ஊராட்சியில் ரூ.1842 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். ஊரக பகுதிகளில் ரூ.365 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். மாநகராட்சி விரிவாக்க பகுதிகளில் ரூ.300 கோடி செலவில் சாலை வசதி உட்பட பிற வசதிகள் செய்து தரப்படும்.

நீர்நிலைமேம்பாடு & நகர்ப்புற திட்டங்கள்: ஊரகப்பகுதிகளில் இருக்கும் சிறுபாசன ஏரிகள், கால்வாய் மீட்டெடுக்க ரூ.500 கோடி செலவில் 5000 நீர்நிலைகளை சீரமைக்கும் திட்டம் மக்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும். சுகாதார தமிழ்நாட்டை உருவாக்க புதிய நிறுவனம் ஏற்படுத்தப்படும். சென்னையில் உள்ள கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும். அரசின் தரவு, களஆய்வு, கிராம சபை வாயிலாக ஏழைக்குடும்பங்கள் கண்டெடுக்கப்பட்டு முதல்வரின் தாயுமானவன் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27,922 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நகர்ப்பகுதிகளில் மேம்பாடு நடவடிக்கைக்காக வரும் நிதியாண்டில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகர்புறத்தில் 4458 கி.மீ சாலைகள் ரூ.2500 கோடி செலவில் புதுப்பிக்கப்படும். சிங்காரச்சென்னை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம்: சென்னையில் புதிய ஆவடி, பேப்பர் மில் சாலை 18 மீட்டர், டாக்டர் ராதாகிருஷ்ணன், கல்கி கிருஷ்ணமூர்த்தி சாலை 30 மீட்டர் அளவு அகலப்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை தீவுத்திடலில் இயற்கை எழில், திறந்தவெளி திரையரங்கம், கடற்கரை அழகு மேம்பாடு ஆகியவை ரூ.250 கோடி செலவில் மேம்பாடு செய்யப்படும். வடசென்னை நகரில் வளர்ச்சியை ஊக்குவிக்க வாட்டர் பேசின் சாலையில் ரூ.75 கோடி செலவில் புதிய குடியிருப்பு, ரூ.53 கோடி செலவில் எழும்பூரில் மருத்துவமனை, ராயபுரத்தில் ரூ.96 கோடி செலவில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறக்கப்படும் உட்பட பல திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வடசென்னை குடிநீர் கட்டமைப்பு, கழிவுநீர் அகற்றம் திட்டத்திற்காக ரூ.900 கோடி செலவில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும். பூந்தமல்லி பகுதியில் ரூ.500 கோடி செலவில், 150 ஏக்கர் பரப்பில் அதிநவீன படத்தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும். கூவம், அடையாறு ஆகியவற்றை சீரமைக்க நலத்திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் இதற்காக ரூ.1500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நெமிலி கடல்நீர் குடிநீர் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: பூங்காக்கள் வாயிலாக இயற்கை சூழல் பசுமையை ஏற்படுத்த நகர்ப்புற பசுமை திட்டம் செயல்படுத்தப்படும். கடலூர், திருச்சி, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தாம்பரம், திண்டுக்கல், நாகர்கோவில், காரைக்குடி, ராஜபாளையம், புதுக்கோட்டை ஆகிய மாநகராட்சி & நகராட்சிகளில் சோதனை பெயரில் 24 மணிநேரமும் நீர் வழங்கும் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலத்திலும் இத்திட்டம் விரிவமைக்கப்படும். சென்னை நகரில் கழிவறை கட்டுதல் & பராமரிப்புக்காக ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல, சேலம் மற்றும் திருச்சியில் இத்திட்டங்கள் விரிவுபடுத்தப்படும். ரூ.1517 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நெமிலில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் இரண்டாம்கட்ட பணிகள் ரூ.7300 கோடி செலவில் செயல்படுத்தப்படும். இதனால் ஓசூர், கிருஷ்ணகிரி உட்பட 6200 வீடுகளில் உள்ள 8 இலட்சம் மக்கள் பலன் பெறுவார்கள். நாமக்கல் சேந்தமங்கலம், எருமைப்பட்டி உட்பட 4 ஒன்றியத்தில் 2 இலட்சம் மக்கள் பலன் பெரும்வகையில் ரூ.300 கோடி செலவில் குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்படும். வைகை ஆற்றின் வாயிலாக சின்னாளப்பட்டி, ஆத்தூர் நிலக்கோட்டை உட்பட 400 ஊரக பகுதியில் வசிக்கும் 6 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.565 கோடி செலவில் புதிய கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.25858 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள்: ஆணுக்கு - பெண் நிகர் என்பதை உறுதி செய்யும் வகையில், நாட்டிற்கே முன்னோடியாக பெண்களுக்கு பல விஷயங்களில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்கான திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பெண்கள் மாத உரிமைத்தொகை திட்டத்தின் வாயிலாக 1.15 கோடி பேர் பலன்பெற்றுள்ளனர். மகளின் நலன்காக்கும் திட்டத்திற்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டதால் பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவி செய்துள்ளது. நகர்ப்புற பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40%ல் இருந்து 65% ஆக உயர்ந்துள்ளது. திருநங்கைகளும் கட்டமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். வால்பாறை, நீலகிரி உட்பட பிற பகுதிகளுக்கும் இவை விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஏழை - எளிய மக்கள் உயர்கல்வி படிப்பதை உறுதி செய்யும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தில் 2.73 இலட்சம் மாணவிகள் ரூ.1000 பெற்று வருகின்றனர். இதன் வாயிலாக கூடுதலாக 34 ஆயிரம் மாணவிகள் உயர்கல்வி படிக்கச் இணைந்து இருக்கின்றனர். வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசு உதவிபெறும் பள்ளியிலும் காலை உணவுத்திட்டம்: காலை உணவுகளை சாப்பிடாமல் வருவதால் கவனச்சிதறல் ஏற்படுகிறது, ஊட்டச்சத்து குறைவதால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு, அவர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. குழந்தைகள் பசியின்றி பயில அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காகவும் ரூ.600 கோடி செலவில் திட்டம் நீட்டிப்பு செய்யப்படும். ஊட்டச்சத்து குறைபாடுகளை உறுதி செய்து, அதனை சேரி செய்யவும், பிற திட்டத்திற்காகவும் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக ரூ.3200 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வரும் நிதியாண்டில் கூடுதலாக 10 ஆயிரம் புதிய சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு, ரூ.35 ஆயிரம் கோடி பணம் கடனாக கொடுக்கப்படும். சென்னை, ஓசூர், மதுரை, கோவை உட்பட பகுதிகளில் ரூ.26 கோடி செலவில் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும். உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவருக்கான செலவுகளை அரசு ஏற்கும். பூஞ்சோலை மாதிரி இல்லம் அமைக்க ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.1000 கோடி செலவில் பள்ளி கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். ஸ்மார்ட் வகுப்பறைகள் உட்பட பிற மேம்பாட்டுக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 37 மாவட்டங்களில் நடைபெற்ற புத்தக கண்காட்சியால் 5 இலட்சம் நபர்கள் பயனடைந்து, ரூ.50 கோடி புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பள்ளிக்கல்வித்துறைக்காக ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உயர்கல்விக்கான செயல்பாடுகள்: கல்லூரி மாணவர்களுக்கான அரசு பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் தரம் உத்தரப்படும், புதிய வழக்கங்கள் அமைக்கப்படும். கணினி உட்பட கருவிகள் ரூ.120 கோடி செலவில் வழங்கப்படும்.கல்லூரி கட்டிடம் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.3014 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பொறியியல், வேளாண்மை உட்பட படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களான கல்வி உட்பட அணைத்து கட்டணத்தையும் அரசு ஏற்றுக்கொள்கிறது. இதற்காக 28 ஆயிரம் மாணவர்களின் கல்விக்கட்டணம் ரூ.511 கோடியை அரசு ஏற்றுக்கொள்கிறது. கோவையில் கலைஞரின் நூலகம் புதிதாக அமைக்கப்படும். உயர்கல்வித்துறைக்கு ரூ.8 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக 28 இலட்சம் மாணவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் ரூ.200 கோடி செலவில் புதிய வளர்ச்சிப்பணிகள் முன்னெடுக்கப்படும். மத்திய பணியாளர் தேர்வாணையம், வங்கித்தேர்வுகள், இரயில்வே தேர்வுகளில் வெற்றிபெற்று பயிற்சி பெறுவோருக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை தொடர புதிய திட்டம் செயல்படுத்தப்படும். அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படும். அரசுப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்காக, உயர்கல்வியை படித்தால் மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதற்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.2500 கோடி செலவில் கல்விக்கடன் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்: சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரி மாவட்டங்களில் ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இளைஞர்களின் ஆற்றல், அறிவுறுத்திறனை மேம்படுத்த இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படும். கலைஞர் விளையாட்டு தொகுப்பு வழங்கப்படும். மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த 6 விளையாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்படும். இளைஞர் நலன் விளையாட்டுத்துறைக்காக ரூ.440 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ரூ.2887 கோடி செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. கடலூர் வேப்பூர், திண்டுக்கல் குஜிலியம்பாறை, கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி, புதுக்கோட்டை கந்தர்வகோட்டை, திருவண்ணாமலை செங்கம், திருச்செந்தூர் ஏரல் உட்பட 10 இடங்களில் அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ரூ.111 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

மருத்துவத்துறை: மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்தி, உயர்ந்த சிகிச்சை வழங்க, காப்பீடு தொகைக்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யபடுகிறது. நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.2 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. இராமநாதபுரம் ராமேஸ்வரம், அரியலூர் செந்துறை, காஞ்சிபுரம் திருப்பெரும்புதூர் 50 படுக்கைகள் கொண்ட கட்டிடட வளாகங்கள் ரூ.42 கோடி செலவில் அமைக்கப்படும். ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.40 கோடி செலவில் 100 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்படும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கவும், அதனை முதலிலேயே கண்டறிந்து தவிர்க்கவும், சிகிச்சை அளிக்கவும் புதிய புற்றுநோய் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். 25 அரசு மருத்துவமனையில் போதைப்பழக்க மீட்பு மையம் ரூ.20 கோடி செலவில் அமைக்கப்படும். மருத்துவம் & மக்கள் நலவாழ்வுத்துறைக்காக ரூ.20198 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

தூத்துக்குடியில் புதிய விண்வெளி பூங்கா: ஜவுளி & ஆயத்த ஆடை பூங்கா விருதுநகரில் ரூ.1500 கோடி செலவில் தொடங்கப்பட்டு, 2 இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். சேலம் சிப்காட் பூங்காவில் 8 ஆயிரம் பேருக்கு வேலைகள் வழங்கப்படும், ரூ.800 கோடி முதலீடு ஏற்படுத்தப்படும். தஞ்சாவூரில் செங்கிப்பட்டி சிப்காட்டில் புதிய தொழிற்பூங்கா அமைக்கப்படும். சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகள் அங்கு தொடங்கப்படும். ஆயத்த தொழிற்கூடங்கள் புதிதாக அமைக்கப்பட்டு, பெண்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும். பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு நேரடி வேலைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, பெண்களின் ஊதியத்தில் 10% மானியமாக 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். திருமணம், மகப்பேறுக்கு பின் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பயிற்சி வழங்கப்படும். தென்மாவட்டத்தில் 1.10 இலட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இஸ்ரோ சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய விண்வெளி ஏவுதளத்தை அமைத்து வருகிறது. அதனை ஊக்குவிக்க விண்வெளி பூங்கா உருவாக்கப்படும். உலகளாவிய திறன் மையங்களில் பணியாற்றும் நபர்களுக்கு மானியம் வழங்கப்படும். குறு-சிறு-நடுத்தர நிறுவனத்திற்கு மின்னணு முறையில் விரைந்து பணிகள் செயல்படுத்தப்படும். 80 ஏக்கர் பரப்பில், 32 கோடி செலவில் 3 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் தொழிற்கட்ட அமைப்புகள் மேம்படுத்தப்படும். ரூ.1557 கோடி குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னை போல் கோவை உட்பட பிற நகரத்திலும் இலவச வை-பை சேவை வழங்கப்படும். தஞ்சாவூர், சேலம், திருப்பூர், தூத்துக்குடி பகுதிகளில் புதிய டைடல் பார்க் பூங்கா அமைக்கப்பட்டுள்ளன. செயற்கை - நுண்ணறிவு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப திட்டங்கள் செயல்படுத்தப்படும். உயர் தொழில்நுட்ப அலுவலகங்களை அமைக்க ரூ.1100 கோடி செலவில் கோவை விளாங்குறிச்சியில் புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

நீர் மேலாண்மை, சென்னை மெட்ரோ திட்டங்கள்: பருவகால மழைநீரை சேகரிக்கவும், பாசனத்தை உறுதி செய்யவும், புதிய அணைக்கட்டு, பராமரிப்பு பணிகள் ரூ.234 கோடி செலவில் அமைக்கப்படும். பழைய அணைகள் பராமரிப்புக்காக ரூ.66 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். கல்லணை புதிய அணைக்கட்டுக்காக கூடுதகள் ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்டுகிறது. நீர் மேலாண்மை துறைக்காக ரூ.30 கோடி செலவில் இணையதள சேவை டிஜிட்டல் மயமாக்கப்படும். மொத்தமாக 8 ஆயிரம் கோடி நீர்மேலாண்மை துறைக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பசுமை ஆற்றலை உருவாக்க புதிய திட்டத்திற்காக நடவடிக்கை எடுக்கப்படும். ரூ.60000 கோடி செலவில் புதிய புனல் மின் நீரேற்று மையங்கள் உருவாக்கப்படும். சுற்றுசூழல், இயற்கை வளங்கள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது நமது கடமை. அரியவகை உயிரினங்களை பாதுகாக்க ரூ.50 கோடி செலவில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். 14 கடலோர மாவட்டங்களில் நெய்தல் மீட்சி இயக்கத்திற்கு ரூ.1275 கோடி ஒதுக்கீடு செய்ய்யப்படுகிறது. கடலோர பாதுகாப்பு, சமூக வாழ்வாதாரம் மற்றும் மேம்பாடு உட்பட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும். கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரைகள் ரூ.280 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு, தரசான்றிதழ்கள் வழங்கப்படும். புதிய பேருந்துகள் வரும் நிதியாண்டில் 3 ஆயிரம் வாங்கப்படும். 500 மின் பேருந்துகளும் இந்த நிதியாண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சிற்றுந்து திட்டம் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ இரயிலின் இரண்டாம்கட்ட பணிக்காக 12000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பூந்தமல்லி - கோடம்பாக்கம், கோவை, மதுரை ஆகிய இடங்களில் மெட்ரோ இரயில் திட்டப்பணி அறிக்கை மத்திய அரசுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் - கிளம்பாக்கம் இடையே மெட்ரோ திட்டம் நீட்டிப்பு செய்ய மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆவடி, பூந்தமல்லி மெட்ரோ நீடிப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆதி திராவிடர் & பழங்குடியினர் முன்னேற்றம்: நகர்ப்புறம் & ஊரக பகுதிகளில் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் மேம்பாடுகளை ஏற்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருமணகூடம், விளையாட்டு மையங்கள் ரூ.120 கோடி செலவில் அமைக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, சென்னையில் 5 நவீன மாணவர் விடுதிகள் அமைக்கும் பணிகள் ரூ.150 கோடி செலவில் நடைபெறுகிறது. அடுத்தகட்டமாக ரூ.75 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்படும். பழங்குடியினர் வாழ்விடம், பிற மேம்பாட்டுக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் வாயிலாக சாலை, குடிநீர் உட்பட பிற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். வேலைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களின் முன்னேற்றம் உறுதி செய்யப்படும். ஆதி திராவிடர் பழங்குடியினர் துறைக்கு ரூ.3076 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர் & மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் துறைக்காக ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சுற்றுலா மேம்பாடு: ரூ.5718 கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கும்பாவிஷேகம், அன்னதானம் என அரசு பல நலப்பணிகளை செய்து வருகிறது. 1000 ஆண்டுகள் பழமையான கோவில் கும்பாவிஷேக பணிகளாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தேவாலயங்கள், மசூதிகள் பழமை மாறாமல் புனரமைப்பு செய்ய்யப்படும். குமரி, மதுரை, தஞ்சாவூர், கோவை ஆகிய இடங்களில் சுற்றுலா மேம்படுத்தப்படும். தமிழ்நாடு சுற்றுலாத்துறையை மேம்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவரின் சார்பில் சுற்றுலா மேம்பாடு குழு ஏற்படுத்தப்படும். விலங்குகள் இனப்பெருக்க தடை திட்டத்தை செயல்படுத்த ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. விலங்குகள் நலவாரியத்திற்கு ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மீன்பிடி தடைகளை தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து 8 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ரூ.450 கோடி செலவில் தூண்டில் வளைவு, தூர்வாருதல் உட்பட பல பணிகள் மேற்கொள்ளப்படும். பால் தரத்தை உறுதி செய்ய ரூ.28 கோடி செலவில் நவீன பொருட்கள் வழங்கப்படும். கரூர், ஈரோடு மாவட்டங்களில் 10 சிறிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும். தொழில்நுட்ப ஜவுளி சிறப்பு ஆராய்ச்சி தொழில் மேம்பாட்டு நிதி வழங்கப்படும். ரூ.500 கோடி செலவில் சிறப்பு நூற்புத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இராணுவ வீரர்கள் நலன்: திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோவில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும். ரூ.20 கோடி செலவில் கைவினை கலைஞர்கள் மேம்பாடு திட்டம் ஏற்படுத்தப்படும். கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் ரூ.227 கோடி செலவில் அமைக்கப்படும். இராணுவ வீரர்களின் நலனுக்காக, 1.20 இலட்சம் முன்னாள் படைவீரர்கள் பலன் பெரும் வகையில் அவர்களுக்கான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். 10 ஆயிரம் பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 27 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்களும், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக 32 ஆயிரம் பேர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ரூ.104 கோடி செலவில் நவீன சிறைச்சாலை அமைக்கப்படும். நிதிப்பற்றாக்குறை ரூ.94060 கோடியாக வரும் நிதியாண்டில் அதிகரிக்கும்.பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்பாடு & கடத்தல் தடுப்புக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் 46 புதிய காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் இருக்கும் 1551 காவல் நிலையங்களில், நவீன மயமாக்கம் நடவடிக்கை காரணமாக பல புதிய திட்டங்கள் ரூ.124 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். தீயணைப்புத்துறையை நவீனப்படுத்த ரூ.327 கோடி செலவில் புதிய வாகனங்கள், கருவிகள் வாங்கப்படும்.

லேட்டஸ்டலி தமிழ் செய்திகளை தொடர்ந்து படியுங்கள்.. இதுபோன்ற பல செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.