செப்டம்பர் 25, சென்னை (Chennai News): தமிழ்நாடு எரிசக்தித் துறை தலைமைச் செயலாளர் பீலா வெங்கடேசன் புற்றுநோயால் காலமானார். லடாக்கில் தனி மாநில அந்தஸ்து கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றியை பதிவு செய்து இறுதிசுற்றுக்கு முன்னேறியுள்ளது. தவெக தலைவர் விஜயின் பிரச்சார பயணத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள் ஊதியம் வழங்கப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் காலமானார் (Beela Venkatesan) :
தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் (வயது 56) புற்றுநோய் காரணமாக (Beela Rajesh Death) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் நேற்று காலமானார். கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா சமயத்தின் போது தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளராகவும் இவர் பணியாற்றி இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். Beela Venkatesan: தமிழக அரசின் எரிசக்தித் துறை தலைமை செயலாளர் பீலா வெங்கடேசன் புற்றுநோயால் காலமானார்..!
லடாக்கில் வெடித்த வன்முறை (Ladakh Protest) :
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கை அரசியல் அமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் எனவும், தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்னிறுத்தி நேற்று போராட்டம் நிகழ்ந்து வந்தது. ஒருகட்டத்திற்கு மேல் போராட்டம் வன்முறையாக மாறவே, காவல்துறையினரின் வாகனங்களுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு பாஜக அலுவலகத்தின் ( Ladakh BJP Office Attack) மீது கல்வீசி தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வன்முறையில் இதுவரை 80-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயமடைந்த நிலையில், 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தால் தற்போது லே நகரில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா அபார வெற்றி (IND Vs BAN Asia Cup 2025) :
நேற்று சூப்பர் 4 சுற்றின் 16வது போட்டியில், இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168 ரன்கள் அடித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 19.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆசிய கோப்பை பைனலுக்கு சென்றது.
தவெக தலைவர் விஜயின் பிரச்சார பயணத் திட்டத்தில் மாற்றம் :
தவெக தலைவர் விஜயின் பிரச்சார பயணத் திட்டம் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஒரே நாளில் 3 மாவட்டங்கள் பிரச்சார பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில், தற்போது இப்போது 2 மாவட்டங்களுக்கு மட்டுமே பிரச்சார பயணம் செய்வதாக கூறப்படுகிறது. அதேபோல சில இடங்களில் வழித்தட மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.
ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் (Diwali Bonus Announced for Railway Employees) :
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கும். அடுத்த மாதம் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை சிறப்பிக்கப்படும் நிலையில் , ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் ஆக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸால் 10.9 லட்சம் ஊழியர்கள் பலனடைகின்றனர்.