செப்டம்பர் 22, சென்னை (Chennai News): இந்தியாவில் ஜிஎஸ்டி புதிய வரி மாற்றங்கள் இன்று அமலுக்கு வருகிறது. நடிகை ராதிகாவின் தாய் கீதா ராதா காலமானார். சென்னை ஒன் செயலி மக்களுக்கு புதிய போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது. நவராத்திரி கொண்டாட்டங்கள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் பணிநீக்கம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்து விவாதத்தை உண்டாக்கி இருக்கின்றன. காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நாளில் நடந்த இந்த விஷயங்களை சற்று விரிவாக பின்வருமாறு தெரிந்துகொள்ளுங்கள்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் புதிய மாற்றங்கள் :
மத்திய அரசு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரிக்குறைப்பு செயல்முறை இந்தியா முழுவதும் செப்டம்பர் 22,2025 இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி பால் உற்பத்தி பொருட்களுக்கான விலை குறைகின்றன. சிகரெட், பான் மசாலா போன்ற உயிரைக் கொல்லும் பழக்கத்தை கைவிட அதற்கான வரிகள் 40% உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியின் புதிய வரி விதிப்பின் கீழ் சிறு வணிகர்கள் மிகப்பெரிய அளவில் பலன் அடைவார்கள் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது உரையில் தெரிவித்திருந்தார். மேலும் பட்ஜெட் கார்களின் விலையும் ரூ.60,000 வரை குறைந்துள்ளதால் வாகன பிரியர்களுக்கு சற்று மன நிம்மதியான நிலையும் ஏற்பட்டுள்ளது.
நடிகை ராதிகாவின் தாய் கீதா மரணம் :
நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதாவின் தாயாருமான கீதா ராதா தனது 86 வயதில் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு காலமானார். அவரது உடல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் இறுதி சடங்குக்காக வைக்கப்பட்டது. இவரது மறைவிற்கு ராதா ரவி உட்பட பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தியிருந்தனர். தொடர்ந்து மாலை 5 மணி அளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
சென்னை ஒன் ஆப் செயலி அறிமுகம் :
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மக்கள் பிரதானமாக போக்குவரத்துக்காக பயன்படுத்தும் பேருந்து, புறநகர் மின்சார ரயில் சேவை, மெட்ரோ ரயில் சேவை, ஆட்டோ மற்றும் டாக்ஸி போன்ற வசதிகளை ஒருங்கிணைத்து பயன்பெறும் வகையில் சென்னை ஒன் செயலி (Chennai One App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ள அம்சம் மூலமாக நாம் ஆன்லைனில் டிக்கெட்டை முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். மேலும் நமது இலக்கை நோக்கி பயணிக்கும் போது நேரலை ஆப்ஷனை பயன்படுத்துவதால் நமது இருப்பிடம் போன்ற விபரமும் துல்லியமாக இருக்கும். நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் டிக்கெட் எடுக்கும் செயல்களை குறைக்கவும் இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்?
நவராத்திரி கொண்டாட்டம் :
புரட்டாசி மாதத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை (Navratri 2025 celebration) இன்று கோலாகலமாக தொடங்கியது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் வீடு, கோவில்களில் கொலு வைத்து வழிபாடும் நடக்கும். கொலு வைத்து துர்கா தேவிக்கு படைத்து வழிபட அம்மனின் அருளைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இன்று முதல்நாள் நவராத்திரி பூஜை பல இடங்களிலும் தொடங்கியுள்ளது.
டிசிஎஸ் பணிநீக்க பஞ்சாயத்து :
டாட்டா கன்சல்டன்சி நிறுவனம் (TCS Layoffs) தனது பணியாளர்களில் 2% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி சுமார் 12,000 ஊழியர்கள் கட்டாய பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விஷயத்திற்கு டாடா நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 30,000 மேற்பட்ட வேலை இழப்புகள் இதனால் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஊழியர்களை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாகவும், மறுப்பவர்களை கட்டாய பணிநீக்கம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
காந்தாரா ட்ரெய்லர் வெளியீடு :
ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. காந்தாரா சாப்டர் 1 (Kantara Chapter 1 Trailer) என அறியப்படும் இப்படம் அக்டோபர் மதம் 2 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் டிரெய்லர் காட்சிகள் இன்று மதியம் 1 மணியளவில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லரில் ஈஸ்வரன் தர்மத்தை நிலைநாட்ட பூமிக்கு கணங்களை அனுப்புவார் என்பது போலவும், காந்தாரா தெய்வம் மக்களை காப்பாற்றுவது போலவும் இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்று மக்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
ஆசியக்கோப்பை 2025 இந்திய தேசிய கிரிக்கெட் அணி அபார வெற்றி :
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபியா, ஓமன் உட்பட 9 ஆசிய நாடுகள் மோதும் ஆசியக்கோப்பை 2025 (Asia Cup 2025) கிரிக்கெட் போட்டி தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளன. இன்னும் நான்கு போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், நேற்று இந்திய தேசிய கிரிக்கெட் அணி - பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி (India - Pakistan Cricket Match) இடையே பலப்பரீட்சை நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி 18.5 வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது.