Noodles (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 02, அரியமங்கலம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர், அரியமங்கலம், கீழ அம்பிகாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜான் ஜிடி மெயில். இவர் இரயில்வே பணியாளர் ஆவார். இவரின் மகள் ஜான் ஸ்டெபி ஜாக்லின் மெயில் (வயது 16). சிறுமி திருச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். ஜாக்குலினுக்கு நூடுல்ஸ் (Noodles) செய்து சாப்பிடுவதில் அதிக விருப்பம் இருக்கிறது. இதனால் அவ்வப்போது தனது உணவாக அவர் நூடுல்ஸையே எடுத்துக்கொண்டு இருக்கிறார். இதனிடையே, நேற்று அவர் வழக்கம்போல நூடுல்ஸ் உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டு இருக்கிறார். பின் இரவில் உறங்கியுள்ளார். 

உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு:

இதனிடையே, இரவு உறங்கிய ஜாக்லின், மறுநாள் காலையில் சடலமாக குடும்பத்தினரால் மீட்கப்பட்டார். மகள் உறங்குவதாக பெற்றோர் எண்ணியபோது, அவர் எழுந்துகொள்ளாத காரணத்தால் மயங்கி இருப்பதாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் ஜாக்குலின் மரணத்தை உறுதி செய்தனர். இதனால் பெற்றோர் மகளின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் அக்கம்-பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அரியமங்கலம் காவல்துறையினர், ஜாக்குலினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உறவினர்கள் - காவல்துறையினர் இடையே சிறுவாக்குவாதம் எழுந்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடலை மீட்டனர்.

முதற்கட்டமாக சிறுமி ஆன்லைனில் வாங்கிய நூடுல்ஸ் அவரின் மரணத்திற்கு காரணம் என கூறப்படும் நிலையில், பிரேத பரிசோதனை முடிவிலேயே அதுகுறித்த உண்மை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.