ஆகஸ்ட் 21, மதுரை (Madurai News): மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (ஆகஸ்ட் 21) நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாகவே மாநாடு முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இன்று காலை முதலே தொண்டர்கள் வந்துகொண்டே இருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகரித்ததால், தரையில் விரிக்கப்பட்டிருந்த பச்சை மேட்டை, பிரித்து எடுத்து மேற்கூரையாக பயன்படுத்தி வந்தனர். TVK Maanadu: தவெக மாநாடு; முக்கிய நிகழ்வுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் இதோ..!
விஜய் ரேம்ப் வாக்:
இதனையடுத்து, பிற்பகல் 3.30 மணிக்கு தவெக கட்சி தலைவர் விஜய் (TVK Vijay) மாநாட்டு திடலுக்கு வந்து, தனது பெற்றோர் மற்றும் கட்சி உறுப்பினர்களை சந்தித்தார். பின்னர், மாநாட்டு திடலில் கூடியிருந்த தனது தொண்டர்கள் மத்தியில் தலைவர் விஜய் ரேம்ப் வாக் செய்தார். உடன் பவுன்சர்கள் சென்றனர். இருபக்கமும் தடுப்புகள் போடப்பட்டிருந்தன. இருப்பினும், தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி சென்றனர். அவர்களை பவுன்சர்கள் தடுத்து வெளியேற்றினர். இதனையடுத்து, ரேம்ப் வாக் முடிந்த பின்னர் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து செல்ல ஆரம்பித்தனர். இருப்பினும், மறுபுறம் தொண்டர்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்.
தவெக தலைவர் விஜய் ஆவேசம்:
இதனைத்தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் மேடையில் பேசி வருகிறார். அப்போது, நம்முடைய ஒரே அரசியல் எதிரி திமுக. கொள்கை எதிரி பாஜக என ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, ஊரை ஏமாற்றும் கட்சி தவெக கிடையாது என்றார். நம்மிடம் மாபெரும் பெண்கள் சக்தி, மாபெரும் இளைஞர்கள் சக்தி உள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் நம்மிடம் உள்ளனர். 2026இல் ஆட்சி நம்ம ஆட்சி தான் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், 3வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கும் பிரதமர் மோடி ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஆட்சி செய்யவா? அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படவா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து, பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.