நவம்பர் 18, வியாசர்பாடி (Chennai News): சென்னை, வியாசர்பாடியில் (Vyasarpadi) கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 33). இவர், நேற்று (நவம்பர் 17) மாலை தனது மனைவி கவுசல்யா மற்றும் இரண்டரை வயது மகன் புகழ்வேலனுடன் பைக்கில், பேசின் பாலம் அசோக் பில்லர் வழியாக சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென பறந்து வந்த மாஞ்சா நூல் (Mancha Yarn), குழந்தை புகழ்வேலன் கழுத்தில் சிக்கியது. வானிலை: 12 மாவட்டங்களில் இன்று கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இதில், குழந்தை கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து ரத்தம் வழிந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பாலமுருகன் உடனடியாக குழந்தையை மீட்டு, வியாசர்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். அங்கு, குழந்தை கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து, தகவலறிந்த வியாசர்பாடி காவல்துறையினர் வியாசர்பாடி முழுவதும் தீவிர சோதனை செய்து அப்பகுதியில் காற்றாடி விட்ட விஜயகுமார், ஹரி, கரண், மற்றும் 16 வயது சிறுவர்கள் 2 பேர் என 8 பேரை காவல்நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து மாஞ்சா நூல் காற்றாடி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ராயபுரத்தை சேர்ந்த ஜிலானி பாஷா (வயது 48) என்பவர் திருமணமாகி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
கொருக்குப்பேட்டையில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்யும் இவர், நேற்று (நவம்பர் 17) மாலை வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, ராமலிங்க அடிகளார் கோயில் அருகே சென்றபோது, இவரது கழுத்தில் மாஞ்சா நூல் சிக்கியது. உடனடியாக பைக்கை நிறுத்தியுள்ளார். அதற்குள் கழுத்து மற்றும் கை உள்ளிட்ட இடங்களில் மாஞ்சா நூல் அறுத்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜிலானி பாஷா தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ஒரே நாளில் இருவேறு இடங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.