Document (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 12, புதுடெல்லி (Technology News): வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள், அங்கு தங்குவதற்கு வீடுகளை வாடகைக்கோ, குத்தகைக்கோ எடுப்பது வழக்கம். அவ்வாறு தனியாக வீடுகளை எடுத்தும் தங்கும் போது சில ஒப்பந்தங்களில் வீட்டு உரிமையாளரும், வாடகைக்கு தங்குபவர்களும் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். பெரும்பான்மையானோர் இதைப் பின்பற்றுவதில்லை.

வீடு குத்தகை ஒப்பந்தம் மற்றும் வீடு வாடகை ஒப்பந்தம், உரிம ஒப்பந்தம் என தங்கள் தேவைக்கேற்ப ஒப்பந்தங்களை செய்து கொள்ளலாம். எதுவாயினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் கட்டாயம் இடம் பெற வேண்டும். இது பிற்காலத்தில் ஏற்படும் சட்ட சிக்கல்களை குறைக்க உதவுகிறது. இருவரும் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களில் கவனிக்க வேண்டியவை. விவரங்களை கவனிக்க வேண்டும்.

தனிப்பட்ட விவரங்கள்:

ஒப்பந்தத்தில், வாடகைக்காரரின் குடும்பத்தின் உள்ள அனைத்து உறுப்பினர்களின் முழுப் பெயர்கள் மற்றும் தொடர்பு எண்கள் போன்ற விவரங்களும், வீட்டு உரிமையாளரின் பெயர், தொடர்பு எண் போன்ற விவரங்களும் இடம் பெற வேண்டும். மேலும் வீட்டு உரிமையாளர் தங்கியிருக்கும் வீட்டு முகவரியும் இடம் பெற வேண்டும். Money: பணத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உள்ள தொடர்பு.. என்ன தெரியுமா?!

வீட்டின் விவரங்கள்:

ஒப்பந்தம் செய்யும் போது வாடகைக்கு விடும் வீட்டின் விவரங்கள் முக்கியமாக இடம் பெற வேண்டும். வீட்டின் முகவரி மற்றும் வீட்டில் எத்தனை அறைகள் இருக்கின்றது என்ற விவரங்களும் குறிக்கப்பட வேண்டும். மேலும் இந்த வீட்டை, வாடகை அல்லது குத்தகைக்கு விடுவதற்கான காரணத்தை வீட்டு உரிமையாளர் பத்தியாக குறிப்பிட வேண்டும். மேலும் கூடுதலாக வீட்டில் என்ன பொருட்களுடன் வாடகைக்கு வீடு தரப்படுகிறது எனவும் குறிப்பிட வேண்டும். உதாரணமாக வீட்டை வாடகைக்கு அளிக்கும் போது, லைட், ஃபேன் போன்றவை இருக்கும். செமி ஃபர்னிச்சர்ட் என்றால் டிவி, ஃப்ரிட்ஜ், சோஃபா இருக்கும் இவைகளையும் ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.

காலத்தையும் குறிக்க வேண்டும்:

வாடகைத்தாரர் எத்தனை காலம் வீட்டில் தங்கப் போகிறார் என்ற விவரத்தை குறிப்பிட வேண்டும். மேலும் வீட்டை காலி செய்வதற்கு, எத்தனை நாட்களுக்கு முன் வீட்டு உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட வேண்டும். மேலும் சில வீட்டு உரிமையாளர்கள் கண்டிப்பாக 3 மாதம் தங்க வேண்டும் என்ற விதிகளும் விதிப்பர். அது போன்ற விதிகள் இருந்தால் அதையும் ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.

வாடகை:

வாடகைக்கு வீட்டிற்கு செல்லும் முன்னரே மாத வாடகையா அல்லது குறிப்பிட்ட மாதம் மொத்தமாக வசூலிக்கப்படுமா, மற்றும் பணம் பெறுதலை ஆன்லைனிலா அல்லது ஆஃப்லைனிலா என்றும் ஒப்பந்தத்திலேயே குறிப்பிட வேண்டும். அதனுடன் வாடகையை ஒரு வருடத்திற்கு பிறகு வீட்டு உரிமையாளர்கள் உயர்த்தக் கூடும். அதையும் ஒப்பந்தத்தில் எவ்வளவு உயர்த்துவர் என குறிப்பிட வேண்டும்.

பாதுகாப்பிற்கான அட்வான்ஸ்:

வீடுகளை வாடகைக்கு விடுவதற்கு முன் அட்வான்ஸ் வசுலிக்கப்படுவது வழக்கம். வீட்டு உரிமையாளர்களால், அட்வான்ஸ் எவ்வளவு நிர்பந்திக்கப்பட்டுள்ளது எனவும் ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும். மேலும் வாடகைத்தாரார் வீட்டை விட்டு செல்லும் போது பராமரிப்பு, சேதாரம், கடைசி மாத வாடகை என அனைத்தையும் பிடித்து விட்டு மீதி தரும் தொகையை கணக்குகளுடன் குறிப்பிட வேண்டும்.

ஒப்பந்தம் புதுப்பித்தல்:

ஆரம்பத்திலேயே எத்தனை வருடத்திற்கு ஒப்பந்தம் போடுகிறீர்கள் எனக் குறிப்பிடுவதுடன் மீண்டும் காலம் நீட்டிப்பு செய்யலாமா அல்லது அத்துடன் ஒப்பந்தம் முடிகிறதா என்ற விவரத்தையும் குறிப்பிட வேண்டும். குறிப்பிட்ட காலகெடு முடிவடையும் காலத்திலிருந்து முன்கூட்டியே உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும். கால நீட்டிப்பு சில இடங்களில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

நிபந்தனைகள்:

எத்தனை ஆண்டுகள் தங்குவதாக ஒப்பந்தம் போடும் காலத்திற்குள்ளாகவே காலி செய்ய நினைப்பவர்கள், அதை எத்தனை மாதங்களுக்கு முன்பு உரிமையாளரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். அதனுடம் வீடுகள் வாடகைக்கு அலிக்கும் போது உரிமையாளர்கள் மற்றும் வாடகைத்தாரர்கள் இருவரும் போடும் நிபந்தனைகள் விதிகளையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். உதரணமாக வாடகைக்கு கொடுக்கும் வீடு குடும்பத்திற்கா அல்லது பேச்சுலர்ஸ்கா என்பது போன்றவை.