Snapchat (Photo Credit : Pixabay)

அக்டோபர் 03, சென்னை (Technology): கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகமாகி இளம் தலைமுறையினரிடையே வரவேற்பு பெற்ற செயலி ஸ்னாப்சாட். இந்த செயலியின் மூலமாக பயனர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பகிர்ந்து வருகின்றனர். இந்த செயலியின் மூலம் பகிரப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்னாப் என்று அழைப்பதால் ஸ்னாப்சாட் என்ற பெயர் உண்டாயிற்று. அதுபோல இந்த ஸ்னாப்களை பகிர்ந்த பின் 10 நொடிகளுக்கு மட்டுமே காண இயலும். அதன் பின் தானாகவே நீக்கப்படும். ஸ்னாப்சாட் செயலியில் பகிரும் அனைத்து உள்ளடக்கங்களும் குறுகிய காலத்திற்கு மட்டுமே வைத்துக்கொள்ளும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில நிமிடங்களுக்கு பின் மறைந்துவிடும்.

Memories அம்சத்திற்கு கட்டணம் :

பயனர்கள் தாங்கள் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்னாப்சாட் செயலியின் Memories-ல் சேமிக்கும் வசதியும் இருக்கிறது. உலகளவில் சுமார் 1 ட்ரில்லியன் புகைப்படங்களை ஸ்னாப்சாட் தனது Memories-ல் சேமிக்கிறது. இந்த நிலையில், 2016 முதல் இலவசமாக பயன்படுத்தப்பட்ட மெமரிஸ் அம்சத்திற்கு விரைவில் கட்டணம் வசூலிக்க இருப்பதாக ஸ்னாப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டிலிருந்து பல வருடங்களாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிக அளவில் சேமித்து வைத்திருக்கும் பலருக்கும் தாக்கம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது. Best Upcoming Phones In October 2025: விவோ, ஒன் ப்ளஸ், ஒப்போ.. அக்டோபரில் களமிறங்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.. விபரம் இதோ.!

யாருக்கெல்லாம் ஸ்டோரேஜ் இலவசம்?

ஸ்னாப் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, ஒவ்வொரு ஸ்னாப்சாட் பயனருக்கும் 5ஜிபி வரை இலவச மெமரி சேமிப்பு வழங்கப்படும் எனவும், இந்த வரம்பை மீறும் பயனர்களுக்கு 12 மாதங்கள் வரை தற்காலிக சேமிப்பு வழங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பயனர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டவுன்லோட் செய்யலாம் அல்லது Paid Storage Plans மூலம் கட்டணம் செலுத்தி தங்களது தரவுகளை சேமித்து வைக்கலாம். அப்படி சேமிக்காத பட்சத்தில் தங்களது புகைப்படங்கள் நீக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

Memories சேமிப்பு திட்டம் :

ஸ்னாப்சாட் புதிய மெமரிஸ் சேமிப்பு திட்டங்களையும் அறிவித்துள்ளது. அதன்படி, 100ஜிபி சேமிப்பிற்கான அடிப்படைத் திட்டமாக (Snapchat Paid Plans) இந்திய மதிப்பில் மாதம் ரூ.176 (1.99 USD) முதல் இதற்கும் மேல் உள்ள திட்டங்கள் இந்திய மதிப்பில் ரூ.1419 (15.99 USD) வரை இருக்கின்றன. பிரீமியம் உபயோகிக்க விரும்பும் நபர்கள் இந்திய மதிப்பில் மாதம் ரூ.354 (3.99 USD) செலுத்தி 250ஜிபி வரை சேமிப்பு வசதியைப் பெறலாம். இந்த திட்டங்கள் உலகளவில் பயனர்களுக்கு படிப்படியாக அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்னாப்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களது பழைய தருணங்களை மீண்டும் காணவும், பகிரவும் முடிகிறது என கூறப்பட்டுள்ளது.

உலகளவில் விரைவில் அறிமுகம் :

பெரும்பாலான பயனர்கள் தற்போது வரை 5 ஜிபிக்கும் குறைவான மெமரிஸ் அம்சத்தை பயன்படுத்துவதால், கட்டணம் செலுத்துவதில் சில பயனர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மெமரிஸ் சேமிப்பு மாற்றங்களை (Snapchat Subscription Plans) 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகளவில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும், இது தொடர்பாக தங்களின் பயனர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் பயன்பாட்டு கருவிகளின் வழியாக தனியாக அறிவிப்புகளும் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனர்களுக்கு இலவசமாக இருந்த இந்த சேவை பணம் செலுத்துவதால் சிரமமாக இருந்தாலும், இந்த மாற்றம் ஸ்னாப்சாட்டின் சேவைகளில் பல விஷயங்களை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.