India-Australia Flags Representational Image (Photo Credit: Wikimedia Commons)

மே 25, மெல்போர்ன் (Australia News): சர்வதேச அளவில் உள்ள பல நாடுகளில் இந்திய மாணவர்கள் சென்று தங்களுக்கு பிடித்த பட்டத்தை பயின்று வருகிறார்கள். இவ்வாறானவர்கள் மேலை நாடுகளுக்கு சென்று கல்வி பயில, சம்பந்தப்பட்ட நாடுகளால் கல்வி விசா வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் வாழும் அல்லது அங்கிருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான கல்வி விசாவை நிறுத்துவதாக (Australian University Bans Indian Students Education Visa) அதிரடி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பு இந்திய மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்திய மாணவர்களின் கல்வியின் எதிர்காலம் ஆஸ்திரேலியாவில் என்னவாகும் என்ற கேள்வியையும் எழுப்பியது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம், மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் இந்திய மாணவர்களின் கல்வி விசாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் உத்திரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வசித்து வரும் மாணவர்களின் கல்வி விசாவை நிறுத்த அறிவுறுத்தி இருக்கிறது.

இம்மாநிலத்தில் இருந்து வரும் விண்ணப்பதாரர்கள் கல்வி விசாவை முறைகேடாக பெறுவது, போலியான ஆவணங்கள் முறைகேடு செய்வது, விசா முறைகேடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அங்குள்ள பல்கலைக்கழகங்கள் கல்வி விஸா வழங்குவதை நிறுத்தி வைத்து தற்காலிகமாக தடை செய்து அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த நிலையில், அங்கு அவர் பேசுகையில், "இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மாணவர்கள் தங்களின் உயர்கல்வியை இருவேறு நாடுகளிலும் பயில்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு நாடுகளும் வீடுகளாக இருந்து பாதுகாக்கிறது" என கூறினார்.

Prime Minister Narendra Modi Australia Tour (Photo Credit: Twitter)

இந்த நிலையில் தான் இந்திய மாணவர்கள் உயர்கல்வி விவகாரத்தில் மோசடியான ஆவணத்தை வைத்து படிப்பது, விசாவில் முறைகேடு செய்து அங்கு வேலை பார்த்து வருமானம் ஈட்டுவது தொடர்பான புகார்கள் பெறப்பட்டு பிற இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இந்திய மாணவர்களின் விசா தடை குறித்த தகவலை அந்நாட்டு உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. அங்குள்ள பல்கலைக்கழகங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு இது குறித்த புகாரையும் அளித்துள்ளது. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், விக்ட்டோரியா பல்கலைக்கழகம், எடின் கோவன் பல்கலை., டோரன்ஸ் பல்கலை., தெற்கு கிராஸ் பல்கலை இந்திய மாணவர்களின் போலியான சம்பவத்தை அம்பலப்படுத்தின.

மேற்கூறிய கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான விசாவை பெற்று ஆஸ்திரேலியாவுக்குள் வந்த மாணவர்கள், அங்கு வேலை பார்த்து குடும்பத்திற்கு பணம் அனுப்பும் செயலை மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்கள் கல்வி நிறுவனங்களில் படிக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பல்கலைக்கழகங்களின் தரவுப்படி பஞ்சாப், குஜராத், ஹரியானா மாநிலத்தை சேர்ந்தோர் அதிகளவு கல்வி விசாவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியா மேற்படி விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆஸ்திரேலிய அரசுக்கு உறுதி அளித்துள்ளது. ஜூன் மாதம் வரை இந்திய மாணவர்களுக்கு கல்வி விஸா வழங்குவதை மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு 75 ஆயிரம் இந்திய மாணவர்கள் கல்வி விசாவை முறைகேடாக உபயோகம் செய்ததும் கண்டறியப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டில் இந்திய கல்வி விஸா முறைகேடுகள் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது அம்பலமாகியுள்ளது.