நவம்பர் 06, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவில் 47 வது அதிபர் (US Presidental Election Results 2024) தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நவம்பர் 05ம் தேதியான நேற்று நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்து, அந்நாட்டின் 47 வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்கிறார். கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று, பின் 2020 தேர்தலில் தோல்வியை தழுவிய ட்ரம்ப், 2024ல் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறார்.
அமெரிக்கர்கள் ஒன்றுசேருங்கள்:
2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பைடன் (Joe Biden) முதலில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பட்ட நிலையில், அவர் அதில் இருந்து விலகிக்கொண்டார். இதனால் துணை அதிபர் பொறுப்பில் இருந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் (Kamala Harris), அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், டொனால்ட் ட்ரம்ப் "அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே, நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அமெரிக்கர்கள் ஒன்றுசேருங்கள்" என தனது பிரச்சாரத்தை குடியரசுக்கட்சியின் சார்பில் முன்வைத்து இருந்தார்.
கமலா ஹாரிஸுக்கு ஏமாற்றம்:
அமெரிக்க வரலாற்றில் எந்த தேர்தலிலும் இல்லாத வகையில், உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்த தேர்தல் உருவாக்கி இருந்தது. ஏனெனில் இந்த தேர்தலில் அதிபர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், ஒருவேளை அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அவர்களின் கட்சி மற்றும் தனிப்பட்ட கொள்கைப்படி, அகதிகளாக வெளிநாடுகளில் இருந்து வந்து தஞ்சம் அடைந்தோருக்கு அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்திய - அமெரிக்க இராஜாங்க உறவுகள் பெரிதும் பலனடையும் எனவும் கவனிக்கப்பட்டது. அனைத்துக்கும் மேலாக அவர் முதல் பெண் அமெரிக்க அதிபராக இருப்பார் எனவும் கவனிக்கப்பட்டது. இதனிடையே, 2024 தேர்தல் முடிவுகள் கமலா ஹாரிஸுக்கு அதிர்ச்சியை தந்தது. US Presidental Election Results 2024: உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்; ட்ரம்ப்-பின் குடியரசுக்கட்சி முன்னிலை.!
277 வாக்குகளை கடந்து ட்ரம்ப் வெற்றி:
அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் எலக்ட்டோரால் வாக்குகள் அடிப்படையில் அதிபர் தேர்வு செய்யப்படும் நிலையில், மொத்தம் உள்ள 538 இடங்களில் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், டொனால்ட் ட்ரம்ப் 277 வாக்குகளை கடந்து வெற்றி அடைந்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கமலா ஹாரிஸ் 230 க்கும் அதிகமான வாக்குகளை பெற்று பின்தங்கிய காரணத்தால், பெரும்பான்மை பெற்ற ட்ரம்ப் அதிபராக தேர்வு செய்யப்படுவார். 2025 ஜனவரி மாதம் வரை ஜோ பைடனின் பதவிக்காலம் நீடிக்கும் நிலையில், அவரின் பதவி முடிந்ததும் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்பார்.
ட்ரம்ப் ஆட்சியில் நடந்தது:
கடந்த ட்ரம்ப் ஆட்சியின்போது, அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் கல்வி, வேலைவாய்ப்புக்கு வந்துசெல்ல பயன்படுத்தப்படும் எச்1பி விசா கட்டுப்பாடுகளை சந்தித்தது. எனினும், இந்தியா - அமெரிக்கா நல்லுறவு பேணப்பட்டதால், இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு என்பது இல்லை. அதேநேரத்தில், பிந்தைய அரசு அவைகளை தளர்த்தியது. ட்ரம்ப் பதவியில் இருந்தபோது வெளிநாட்டு மண்ணில் இருந்த இராணுவத்தை திரும்பப் பெற்று, உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்த தொடங்கியது. அதேபோல, மெக்சிகோ-அமெரிக்க எல்லை வழியே அகதிகளாக வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரம்மாண்ட சுவரையும் எழுப்பியது. பிந்தைய ஆட்சியில் அவை மடைமாற்றப்பட்டன.
டிரம்பின் வாதம்:
இந்த விவகாரங்கள் அமெரிக்காவில் பெரும் விவாதத்தை எழுப்பிய நிலையில், அமெரிக்காவின் பொருளாதாரம் நலிந்து வருகிறது. அதனை மீட்டெடுக்க அமெரிக்கர்கள் இணைய வேண்டும். நாம் பிற நாடுகளின் பாதுகாப்பை வழங்கி என்ன செய்ய?. நமது நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இங்குள்ள மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என ட்ரம்ப் தனது தரப்பு வாதங்களை முன்வைத்து இருந்தார். இந்த வாதங்கள் அமெரிக்காவில் பூர்வீகமாக இருக்கும் மக்களின் உணர்வுபூர்வமான இடத்தை பெற்றது. US Presidental Election Results 2024: அமெரிக்க அதிபர் வரலாற்றில்.. மிகப்பெரிய வெற்றியை பிடித்த டிரம்ப்.. பாக்ஸ் நியூஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
புலம்பெயர் வெளிநாட்டவரின் நம்பிக்கை தகர்ந்தது:
இதனால் அமெரிக்கர்கள் பெரும்பாலாக வாழும் பல்வேறு மாநிலங்களில் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலைபெற்று வெற்றியை அடைந்தார். அதேநேரத்தில், அமெரிக்கர் அல்லாத மக்கள் அதிகம் கணிசமாக வாழக்கூடிய வாஷிங்க்டன், ஒரேகான், கலிபோர்னியா, விர்ஜினியா, மேரிலேண்ட், நியூயார்க், கணிசமாக வாழக்கூடிய நியூ மெக்சிகோ, கொலரோடோ ஆகிய மாகாணங்களை கமலா ஹாரிஸ் கைப்பற்றினார். அவர் அதிகாரத்திற்கு வந்தால் அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றப்படலாம், அங்கு குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வெற்றி அவரின் வசம் சென்றுள்ளது. அதேநேரத்தில், புலம்பெயர் வெளிநாட்டினர் வசிக்கும் புளோரிடா, ஜியார்ஜியா, டென்னிஸி, ஒக்லஹாமா, லூசியானா ஆகிய மாகாணத்திலும் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
உலகளவில் படைகள் விலகலாம்:
இந்த வெற்றியின் வாயிலாக அமெரிக்காவை மீண்டும் அமெரிக்கர் ஆட்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் நம்பி இருப்பது உறுதியாகியுள்ளது. சர்வதேச அளவில் ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க இராணுவம் உக்ரைன் - ரஷியா போர், இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் உட்பட பல இடங்களில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அவை படிப்படியாக திரும்ப பெறப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சட்டவிரோத குடியேற்றத்திற்கும் மிகப்பெரிய கடிவாளம் இனி வரும் நாட்களில் போடப்படும். ட்ரம்ப் மீது கொலை முயற்சி தாக்குதலும் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள காரணத்தால், அவரின் பாதுகாப்பு இரட்டிப்படையும் எனவும் கூறப்படுகிறது.