ஜூன் 27, ஆப்பிரிக்கா (World News): ஆப்பிரிக்காவில் உள்ள மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தலைநகர் பாங்கு. இங்கு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 5,000க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இந்நிலையில் அங்குள்ள கல்வி திட்டத்தின் படி தற்போது பள்ளியில் ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து தங்களது தேர்வுகளை எழுதிக் கொண்டிருந்தனர். இதனிடையே அங்கு குண்டு வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது.

கோர சம்பவம் :

இதனால் அச்சத்தில் மாணவர்கள் அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர். பள்ளி கட்டிடத்தில் தீப்பிடித்து எரிந்து விபத்து ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் கரும்புகை சூழ்ந்து கொண்டது. இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் 29 மாணவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 280 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். World News: கிறிஸ்துவ மத நிகழ்ச்சியில் துப்பாக்கிசூடு.. 12 பேர் பரிதாப பலி.! 

டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறல் :

இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் பள்ளி அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் சீரமைப்பு பணி நடந்தபோது, வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்நாட்டில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.