ஜூலை 11, பெங்களூரு (Banglore News): தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த பெங்களூரில் 1.5 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் பெங்களூருவில் செயல்பட்டு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் 1 கோடியை தாண்டி விட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. முந்தைய காலங்களில் பூங்கா நகரம் என்ற புனைப்பெயரை கொண்ட பெங்களூர் தற்போது கான்கிரீட் நகரமாக மாறி இருக்கிறது. பெங்களூர் மாநகரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், தெரு நாய்களின் தொல்லையும் அதிகரித்து வந்துள்ளது. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தெருநாய் கடியால் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாய் கடியால் உயிரிழப்பு :
கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக கூட 70 வயதுடைய மூதாட்டி ஒருவர் தெருநாய் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 7,000க்கும் அதிகமானோரை தெருநாய் கடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டில் பெங்களூர் மாநகராட்சியின் கணக்கெடுப்பின்படி, நகரில் 2,79,000 தெருநாய்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவற்றை கட்டுப்படுத்த கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டாலும் எந்த விதமான முயற்சியும் பலனளிக்கவில்லை. வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் அணுகும் பெங்களூரில் தெருநாய் தொல்லை தீராத தலைவலி பிரச்சினையாக மாறி இருக்கிறது. இளம்பெண்ணின் சடலத்தை மூட்டையில் கட்டி ரோட்டில் வீசிய இளைஞர்கள்.. பதறவைக்கும் சம்பவம்.!
தெருநாய்களுக்கு உணவு திட்டம் :
இதனிடையே தெருநாய் தொல்லைக்கு முக்கிய காரணம் அதற்கு ஊட்டச்சத்து போன்ற உணவுகள் கிடைக்காதது. அதனாலேயே அவை மனிதர்களை தொந்தரவு செய்து வருகின்றன என்பதை எடுத்துரைக்கும் அதிகாரிகள், தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க மாநகராட்சியின் சார்பில் புதிய உணவு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்கின்றனர். அதன்படி தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ், எக் ரைஸ் போன்ற அசைவ உணவுகளையும் வழங்கி வருகின்றனர். இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ள அதிகாரிகள், அதற்காக ஆண்டுக்கு ரூ.3 கோடி அளவில் செலவிடவும் திட்டமிட்டுள்ளனர்.
விரைவில் தொடங்கப்படும் அசைவ உணவு திட்டம் :
இந்த விஷயம் குறித்து தகவலை பெங்களூர் மாநகராட்சியின் சிறப்பு கமிஷனர் உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டில் பெங்களூர் மாநகராட்சியில் சைவ உணவு நாய்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது சிக்கன் ரைஸ் மற்றும் எக் ரைஸ் போன்றவை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருபுறம் இந்த திட்டத்திற்கு ஆதரவு கிடைத்தாலும், மறுபுறம் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது.