மார்ச் 14, சிவபுரி (Madhya Pradesh News): நவீன தொழில்நுட்பங்கள் பெருகி பல விஷயங்களுக்கு இன்றளவில் மருத்துவ ரீதியான, ஆராய்ச்சி ரீதியான விடை கிடைத்துவிட்டாலும், பழைய நம்பிக்கைகளை பின்பற்றும் மக்களின் எண்ணத்தால், சில நேரம் அசம்பாவிதங்களும் நிகழ்கின்றன. இதனிடையே, பெற்றோரின் அலட்சிய செயல்பாடு காரணமாக, 6 மாத கைகுழந்தையின் முகம் கருகி, அதன் கண்களில் பாதிப்பு ஏற்பட்டு, பார்வை பறிபோகும் துயரம் நடந்துள்ளது.

நெருப்பில் இட்டு பூஜை:

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டம், கோலர்ஸ், ராம் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஆதேஷ் வர்மா. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி இருக்கிறார். தம்பதிகளுக்கு சமீபத்தில் தான் ஆண் குழந்தை பிறந்தது. ஆறு மாத கைக்குழந்தைக்கு மயங்க் என பெயர் வைத்து வளர்ந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று குழந்தையை பெற்றோர் அங்குள்ள ஹனுமான் காலனி பகுதியில் வசித்து வரும் மாந்த்ரீகவாதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு பூஜை செய்கிறேன் என்ற பெயரில், நெருப்பில் இட்டு பின் எடுத்ததாக தெரியவருகிறது. Vispy Kharadi: 160 கிலோ எடையை கைகளில் தாங்கி, கின்னஸ் சாதனையில் இடம்பெற்ற இந்தியர்.. குவியும் பாராட்டுக்கள்.! 

மருத்துவமனையில் அதிர்ச்சி:

இதனால் குழந்தை கதறியழ, பெற்றோர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், மருத்துவர்களிடம் உண்மையை தெரிவிக்காமல், குழந்தையின் முகத்தில் சூடான தேநீர் தவறி விழுந்துவிட்டது என கூறி இருக்கின்றனர். இதில் உள்ள மர்மத்தை புரிந்துகொண்ட மருத்துவர்கள், குழந்தைக்கு சிகிச்சையளிக்க தொடங்கி, பின் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

காவல்துறை விசாரணை:

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில், குழந்தையை மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றதும், அங்கு பூஜை என்ற பெயரில் நடந்த கொடுமையும் அம்பலமானது. இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் மாந்த்ரீகவாதியை காவல் துறையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், குழந்தை தீக்காயம் அடைந்ததில், பார்வை பறிபோகும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிகின்றனர். பூஜை என்ற பெயரில் மந்திரவாதி செய்தது என்ன? என்ற விஷயத்தில் குழப்பம் நிலவுவதால் விசாரணை தொடருகிறது.