Crime File Picture (Photo Credit: PIxabay)

மே 27, கோழிக்கோடு (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருசூர் பகுதியில், தங்கும் விடுதியுடன் கூடிய ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இவரது குடும்பத்தினர் கோழிக்கோட்டில் வசித்து வருகிறார்கள். இதனால் தனது ஹோட்டல் மாடியில் சித்திக் தங்கியிருந்து பணிகளை கவனித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவரை கடந்த சில நாட்களாக காணவில்லை என குடும்பத்தினர் திருசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் போதே சித்திக் கைவசமிருந்த செல்போனையும் ஒப்படைத்து இருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சித்திக் மொபைல் போனுக்கு அவரின் வங்கி கணக்கிலிருந்து ஏடிஎம் கார்டு மூலமாக ரூபாய் 2 லட்சம் வரையில் பணம் எடுக்கப்பட்டுள்ளது என எஸ்.எம்.எஸ் வந்துள்ளது.

இதனையடுத்து, ஏடிஎம் மையங்களில் உள்ள சிசிடிவி-யை கைப்பற்றிய காவல் துறையினர், 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் பணம் எடுத்து செல்வதை உறுதி செய்துள்ளனர். இதனிடையே, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கு பகுதியில் இருக்கும் நீரோடையில் சூட்கேஸ் இருந்துள்ளது.

இந்த சூட்கேஸை திறந்து பார்க்கையில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, அங்கு விரைந்த காவல்துறையினர் 50 வயது மதிக்கத்தக்க நபரின் கை-கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்தனர். Powassan Virus: உண்ணிகளில் இருந்து பரவி உயிரிழப்பை ஏற்படுத்தும் போவாசன் வைரஸ் பாதிப்பு; மக்களே கவனமாக இருங்கள்.!

உயிரிழந்தவரின் அடையாளத்தை காண மாநிலத்தில் காணாமல் போனவர்களின் பட்டியலை தயார் செய்த காவல்துறையினர், சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டது சித்திக் என்பதை உறுதி செய்தனர். ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்தவருக்கும், சித்திக்கிற்கும் என்ன தொடர்பு? என்ற விசாரணை நடத்துகையில் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பணிக்கு சேர்ந்த முகமது செபிலி என்பதை உறுதி செய்தனர்.

அவரின் செல்போனை ஆய்வு செய்த அதிகாரிகள், அவர் 18 வயதான பர்கானா என்ற இளம்பெண்ணுடன் பேசி வந்ததை உறுதி செய்தனர். இருவரையும் தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர், கேரள மட்டுமல்லாது தமிழ்நாடு மற்றும் கர்நாடகா போன்ற அண்டை மாநில காவல்துறையினருக்கும் தகவலை பகிர்ந்துள்ளனர். இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் காவல்துறையினர் அவர்களை தேடி வந்துள்ளனர்.

இதற்கிடையில், சென்னையில் உள்ள எழும்பூர் இரயில் நிலையத்தில் பெங்களூரில் இருந்து அசாம் செல்லும் எக்ஸ்பிரஸ் இரயிலில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த காதல் ஜோடிகளான இருவரையும் அடையாளம் கண்ட அதிகாரிகள், பெற்றோர்கள் தேடுகிறார்கள் என்று இலாவகமாக பேசி அவர்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ரூபாய் 16 ஆயிரம் பணம், பாஸ்போர்ட் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக கேரளா காவல் துறையினருக்கு சென்னை இரயில்வே காவல் துறையினர் தகவல் அளித்ததன்பேரில், சென்னை வந்த கேரளா காவல் துறையினரிடம் காதல் ஜோடி ஒப்படைக்கப்பட்டது. காதல் ஜோடியிடம் விசாரணை தொடருகிறது.

மற்றொரு புறத்தில் காதல் ஜோடிக்கு உதவி செய்ததாக பர்கானாவின் சகோதரர் கக்கூர், அவரது நண்பர் ஆசிக் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் எதற்காக ஹோட்டல் உரிமையாளரை கொலை செய்தார்கள்? என்ற விஷயம் குறித்து தொடர் விசாரணை நடந்து வருகிறது.