ஜனவரி 08, திருப்பதி (Festival News): ஒரு வருடத்தில் 25 ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். அதில் மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது. இதைத்தான் 'வைகுண்ட ஏகாதசி' விரதம் என்று மக்கள் அனுஷ்டித்து வருகிறார்கள். பெருமாளுக்கு உகந்த பண்டிகையான வைகுண்ட ஏகாதசியை (Vaikuntha Ekadashi) முன்னிட்டு அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சொர்க்க வாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில் (Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam) வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதனை பூலோக வைகுண்டம் என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். மேலும் திருப்பதியிலும் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இதையொட்டி திருப்பதியில் (Venkateswara Temple, Tirumala) வரும் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு இந்த 10 நாட்களுக்கும் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள் மற்றும் வரலாற்றினை பற்றி இப்பதிவினில் காணலாம். Bhogi Festival 2025: "பழையன கழிதலும் புதியன புகுதலும்" - போகி பண்டிகை 2025 வரலாறு, அசத்தல் விளக்கங்கள் இதோ.!
வரலாறு:
முனிவர்களையும், தேவர்களையும் முரண் என்ற அசுரன் துன்புறுத்தியதன் விளைவாக மகாவிஷ்ணு அவனுடன் போர்புரிந்தார். அப்போது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி பெண் உருவம் எடுத்து முரனுடன் போரிட்டு வெற்றி பெற்றதால் அந்த பெண்ணுக்கு ஏகாதசி என விஷ்ணு பெயர் சூட்டியதால் ஏகாதசி என்ற பெயர் வந்தது. வைகுண்ட ஏகாதசி தினத்திற்கு முன் வருகின்ற 10 நாட்கள் பகல் பத்து என்று வைஷ்ணவத்தில் கூறப்படுகிறது. அதையொட்டி, விஷ்ணு கோயில்கள் அனைத்திலும் திருமொழித் திருநாள் என்ற பகல்பத்து உற்சவம் நடைபெறும். இந்த விழாவை முதன்முதலாக நம்மாழ்வார் தொடங்கி வைத்ததாக கூறப்படுகின்றது. வைகுண்ட ஏகாதசி தினம் முதலாக இரவில் பத்து நாட்கள் நடைபெறுவதே திருவாய்மொழித் திருநாள் என்ற இராப்பத்து உற்சவம் என்று வைஷ்ணவம் கூறுகிறது. இராப்பத்து உற்சவ நாட்களில் திருக்கைத்தல சேவை, திருமங்கை மன்னரின் வேடுபறி போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சொர்க்கவாசல்:
மது, கைடபர் என்ற அசுரர்கள் இருவரும் மக்கள் அனைவரையும் துன்பப்படுத்தியபோது, பெருமாள் அவர்களுடன் போர் செய்தார். அதனால், இருவரும் பெருமாளிடம் சரணடைந்து வைகுண்ட ஏகாதசி நாளில் பகவானை தரிசிப்பவர்களுக்கு அனைத்து பாவமும் நீங்கி முக்தி கிடைக்க வேண்டும் என்றனர். அதையடுத்து வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் உருவானது. வைகுண்ட ஏகாதசி திருவிழா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சென்னை பார்த்தசாரதி கோயில், திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயில், கும்பகோணம் சார்ங்கபாணி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் கோயில் போன்ற முக்கிய கோயில்களில் மிக சிறப்பாக நடைபெறும். Pongal 2025: "தை பிறந்தால் வழி பிறக்கும்" 2025 பொங்கல் வைக்க உகந்த நேரம்.. சிறப்புகள் இதோ..!
வைகுண்ட ஏகாதசி நல்ல நேரம்:
2025ம் ஆண்டில் வரும் முதல் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஜனவரி 09ம் தேதி பகல் 12.04 மணிக்கு தொடங்கி, ஜனவரி 10ம் தேதி காலை 10.02 மணி வரை ஏகாதசி திதி உள்ளது. இந்த நாளில் காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண மந்திரத்தை கூறியபடி இருக்க வேண்டும். துவாதசி நாளில் சூரியன் அஸ்தமனம் முடிந்த பின்னரே உறங்க வேண்டும். இதன் மூலம் உடல் பலமும், ஆன்ம பலமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
வைகுண்ட ஏகாதசியின் சிறப்புகள்:
வைகுண்ட ஏகாதசி நாளில் வழிபடுபவருக்கு வைகுண்ட பதவி அளிப்பதாக மது, கைடபர் அசுரர்களுக்கு பெருமாள் வரம் அளித்தார். அதன் காரணமாக சொர்க்க பதவி கிடைக்கும் சிறப்பு நாளாக வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி "முக்கோடி ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து வழிபடுவதால், வாழ்க்கை செழிப்படையும். மறுமை வாழ்வும் மகிழ்ச்சியாக அமையும். மகாலட்சுமியின் அருளால் குபேர சம்பத்து கிடைக்கும். பிரம்மஹத்தி தோஷம், தங்கம் திருடுதல், மதுபானம் அருந்துதல், அகம்பாவம் கொண்டிருப்பதால் உண்டாகும் பாபம் போன்றவைகள் அழிந்து இறுதியில் மோட்சம் கிடைக்கும்.