Navaratri Festival 2025 (Photo Credit: @TNHRCE / @PKSekarBabu X)

செப்டம்பர் 23, சென்னை (Festival News): புரட்டாசி மாதத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. நேற்று முதல் தொடங்கப்பட்ட நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாட்களில் வீடு, கோவில்களில் கொலு வைத்து வழிபாடும் நடக்கும். கொலு வைத்து துர்கா தேவிக்கு படைத்து வழிபட அம்மனின் அருளைப் பெறலாம் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் ஒவ்வொரு நாளுக்கான முக்கியத்துவத்தை பின்வருமாறு பார்க்கலாம்.

நவராத்திரியின் முதல் நாள் :

நவராத்திரி முதல் நாள் மகேஸ்வரியின் வடிவத்துக்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அரிசிமாவால் பொட்டுக்கோலமிட்டு மல்லிகை, சிவப்பு நிற அரளி, வில்வ பூக்களால் அர்ச்சனை செய்யலாம். அம்மனுக்கு வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரை, பருப்பு வடை ஆகியவற்றை படைத்தும் வழிபடலாம். தோடி ராகம் பாடுவது நல்லது.

நவராத்திரியின் இரண்டாம் நாள் :

இரண்டாம் நாள் ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்காக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவினால் கோலமிட்டு வழிபாடு செய்யலாம். முல்லை, துளசி, மஞ்சள் நிற கொன்றை, சாமந்தி, நீல சம்பங்கி பூக்களால் அர்ச்சனை செய்யலாம். புளியோதரை, எள் பாயாசம், தயிர் வடை, வேர்கடலை சுண்டல், எள் சாதம் படைத்து வழிபடலாம். கல்யாணி ராகம் பாடுவது நல்லது.

நவராத்திரியின் மூன்றாம் நாள் :

மூன்றாம் நாள் வராகி அம்மன் வடிவத்துக்காக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் மலர் கோலமிட்டு வழிபடுவது நல்லது. செண்பக மொட்டு, குங்குமத்தால் அர்ச்சனை செய்யப்பட வேண்டும். கோதுமை, சர்க்கரை பொங்கல், காராமணி சுண்டல் போன்றவற்றை பயன்படுத்தி நைவேத்தியம் படைத்து வழிபடலாம். காம்போதி ராகம் பாடுவது நல்லது. Mahalaya 2025 Wishes in Tamil: புரட்டாசி மகாளய அமாவாசை 2025 வாழ்த்துக்கள்.. உங்களுக்கான வாழ்த்து செய்திகள் இதோ.! 

நவராத்திரியின் நான்காம் நாள் :

நான்காம் நாள் மகாலட்சுமி அம்மன் வடிவத்துக்காக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அட்சதை கொண்டு படிக்கட்டு போல கோலமிடுவது நல்லது. செந்தாமரை, ரோஜா, ஜாதிப்பூக்களால் அர்ச்சனை செய்வது கூடுதல் சிறப்பு தரும், தயிர் சாதம், அவல் கேசரி, பால் பாயாசம், கற்கண்டு பொங்கல், கதம்ப சாதம், உளுந்து வடை, பட்டாணி சுண்டல் போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம். பைரவி ராகம் பாடுவது நல்லது.

நவராத்திரியின் ஐந்தாம் நாள் :

ஐந்தாம் நாள் மோகினியின் வடிவத்துக்காக சிறப்பிக்கப்படுகிறது. கடலை மாவு கொண்டு பறவை கோலமிட்டு வழிபாடு செய்யலாம். கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது. சர்க்கரை பொங்கல், கடலைப்பருப்பு வடை, தயிர்சாதம், பாயாசம், பால் சாதம், பூம்பருப்பு சுண்டல் போன்றவற்றை பயன்படுத்தி வழிபடலாம். பந்துவராளி ராகம் பாடுவது நல்லது.

நவராத்திரியின் ஆறாம் நாள் :

ஆறாம் நாள் சண்டிகா தேவி வடிவத்துக்காக சிறப்பிக்கப்படுகிறது. கடலைமாவினால் தேவியின் நாமத்தை கோலம் இடுவது கூடுதல் சிறப்பை தரும். பாரிஜாதம், செம்பருத்தி, சம்பங்கி பூக்களால் அர்ச்சனை செய்யலாம். தேங்காய் சாதம், தேங்காய் பால் பாயாசம், ஆரஞ்சு பழம், மாதுளை, பச்சை பயிறு சுண்டல், கதம்ப சாதம் செய்து நைவேத்தியும் படைத்து வழிபாடலாம். நீலாம்பரி ராகம் நல்லது.

நவராத்திரியின் ஏழாம் நாள் :

ஏழாம் நாள் சாம்பவி துர்க்கை வடிவத்திற்காக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் நறுமண மலர்களால் கோலமிட்டு வழிபாடு செய்யலாம். தாழம்பூ, முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்வது நல்லது. நைவேத்தியமாக எலுமிச்சை பழ சாதம், பழ வகைகள், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், பாதாம் முந்திரி பாயாசம் வைத்து படைத்து வழிபடலாம். பிலஹரி ராகம் நல்லது. Mahalaya Amavasya: மகாளய அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்.. முன்னோர் ஆசி பெற விரதம் இருக்கும் முறை.! 

நவராத்திரியின் எட்டாம் நாள் :

எட்டாவது நாள் நரசிம்ம தாரணி வடிவத்திற்காக சிறப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் பத்ம கோலமிட்டு, மருதோன்றி, சம்மங்கி, வெண்தாமரை குருவாட்சி பூக்கள் படைத்து வழிபடலாம். நைவேத்தியமாக பால் சாதம், தேங்காய் படைத்து வழிபடலாம். புன்னகை வராளி ராகம் நல்லது.

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் :

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் பரமேஸ்வரி வடிவத்துக்காக சிறப்பிக்கப்படுகிறது. வாசனைப் பொடிகளால் கோலமிட்டு தாமரை, துளசி, வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். பழங்கள், தேங்காய் அல்வா போன்றவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபடுவது நல்லது.