அக்டோபர் 10, சென்னை (Health Tips): நாம் உண்ணும் உணவு இரைப்பை மூலமாக செரிக்கப்பட்டு உடலுக்கு ஆற்றலாக வழங்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணியாக இருப்பது ஹைட்ரோ குளோரிக். உடலில் நாளொன்றுக்கு 2 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது.
ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் மூலக்கூறுகள் சிக்கலான உணவுகளை செரிக்க உதவி செய்கிறது. 24 மணி நேரத்தில் இரும்புத்துண்டை கூட செரிக்க வைக்கும் தன்மை ஹைட்ரோகுளோரிக் அமிலத்திற்கு உண்டு.
ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு மூலக்கூறுகளை எளிய மூலக்கூறுகளாக மாற்றி, அதன் மூலமாக ஆற்றலை உடல் உறிஞ்சுவதற்கு உதவு செய்கிறது.
இதன் செயல்பாடுகள் தடைபடும் போது நெஞ்சு எரிச்சல், செரிமானப் பிரச்சனை போன்றவை உண்டாகிறது. அதேபோல, செரிமான அமைப்பில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை தேடி செயலிழக்கவும் செய்கிறது.
இந்த அமிலத்தின் அளவு வயிற்றில் சரியான அளவு இருக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. காரமான அல்லது புளிப்பு சுவை கொண்ட, எண்ணெய் பொருட்கள் போன்றவற்றை சாப்பிடும் போது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் தன்மையானது மாறி அது சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
இதனால் வயிற்றுச் சுவற்றில் புண்கள், நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனையும் உண்டாகின்றன. நாம் உணவு எடுத்துக் கொள்கிறோமோ இல்லையோ, நமது உடல் செயல்பாட்டு மண்டலம் சரியான நேரத்தில் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை இரைப்பையில் சுரந்து விடும்.
பசியிருக்கும் போது நாம் உணவை எடுத்துக் கொள்ளாத பட்சத்தில், ஹைட்ரோ குளோரிக் அமிலம் நமது இரைப்பையை உணவாக நினைத்து சாப்பிடுகிறது. இதுவே பின்னாளில் நெஞ்சு எரிச்சல், குடல் புண் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.
நமது உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்கினால் மட்டுமே, நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ இயலும்.