Vinayagar Chaturthi Special Recipes in Tamil (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 26, சென்னை (Festival News): 2025 ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி பண்டிகை ஆகஸ்ட் 27-ஆம் தேதியான நாளை சிறப்பிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் வசித்து வரும் இந்து மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கிய பண்டிகையாக கவனிக்கப்படும் விநாயக சதுர்த்தி, விநாயகரின் அருள் கிடைக்கும் நாளாக சிறப்பிக்கப்படுகிறது. ஞானம், செல்வம், உயர்வு உட்பட பல விஷயங்களுக்கு அதிபதியாக இருக்கும் முழு முதல் கடவுளான விநாயகர் அவதரித்த நன்னாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விநாயகருக்கு பிடித்த போலி, லட்டு, சுண்டல், பூரண கொழுக்கட்டை போன்றவற்றை செய்வது எப்படி? என இந்தப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். Vinayagar Chaturthi 2025: விநாயகர் அருளைப்பெற உகந்த நேரம், வழிபடும் முறை.. 2025 விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு பற்றி தெரிஞ்சிக்கோங்க.! 

விநாயகருக்கு பிடித்த பூரண் போலி செய்முறை :

தேவையான பொருட்கள் :

  • கடலைப்பருப்பு - ஒரு கப்
  • வெல்லம் - அரை கப்
  • தேங்காய் துருவல் - ஒரு கப்
  • ஏலக்காய் பொடி - சிறிதளவு
  • மைதா மாவு - இரண்டு கப்
  • கோதுமை மாவு - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு
  • சர்க்கரை - ஒரு கரண்டி

    Puran Poli (Photo Credit : @incredibleindia X)
    Puran Poli (Photo Credit : @incredibleindia X)

செய்முறை :

  • முதலில் எடுத்துக்கொண்ட மைதா மாவு, கோதுமை மாவு, உப்பு, சர்க்கரையை நன்கு கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்து எடுத்துக் கொள்ளவும். இறுதியாக நெய்விட்டு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேகவைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மசித்த கடலைப்பருப்பு கலவையில் வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம். பின் உருண்டை பிடிக்கும் பதத்துக்கு பிசைந்து சப்பாத்தி கட்டையால் தேய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • கடலை பருப்பு கலவையை உருண்டையாக உருட்டி மாவுக்குள் பூரணம் போல வைத்து சப்பாத்தி போல தேய்க்க வேண்டும்.
  • பின் கல்லில் நெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான பூரண் போலி (Puran Poli) தயார்.

விநாயகருக்கு பிடித்த லட்டு செய்முறை :

தேவையான பொருட்கள் :

  • கடலை மாவு - 300 கிராம்
  • சர்க்கரை - 400 கிராம்
  • எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
  • முந்திரி, திராட்சை - தலா 10
  • கல்கண்டு - 15
  • பச்சை கற்பூரம் - சிறிதளவு
  • ஏலக்காய் - 4

செய்முறை :

  • முதலில் எடுத்துக்கொண்ட சர்க்கரையில் நீர் விட்டு பாகுபதத்தில் காய்ச்சிக் கொள்ள வேண்டும்.
  • கடலை மாவில் நீர் விட்டு பஜ்ஜி மாவு போல கெட்டியான பதத்துக்கு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை கரண்டியில் வைத்து தேய்த்து முத்து முத்தாக பொரித்து எடுத்து ஆற வைக்க வேண்டும்.
  • பின் அதனை அரிசி அளக்கும் படியால் குத்தி உதிரி உதிரியாக எடுத்துக்கொள்ளவும். நேரத்தை செலவழிக்காமல் விரைவில் முடிக்க மிக்சியிலும் அரைக்கலாம்.
  • அதில் முந்திரி, திராட்சை, இலவங்கம், ஏலக்காய் பொடி, கல்கண்டு, சர்க்கரை பாகு ஆகியவற்றை சேர்த்து கிளறி கைப்பொருக்கும் சூட்டில் பிசைந்து எடுத்தால் சுவையான லட்டு (Laddu) தயார். Ganesh Chathurthi 2025: விநாயகர் சதுர்த்தி 2025: எத்தனை நாட்கள் விநாயகரை வீட்டில் வைத்து வழிபடலாம்? 

விநாயகருக்கு பிடித்த வெள்ளை சுண்டல் செய்முறை :

தேவையான பொருட்கள் :

  • சுண்டல் - 200 கிராம்
  • கருவேப்பிலை - சிறிதளவு
  • கொத்தமல்லி - சிறிதளவு
  • கடுகு, உளுந்து - ஒரு கரண்டி
  • பட்டை மிளகாய் - 3
  • வெங்காயம் - 2

செய்முறை :

  • கொண்டைக்கடலையை முதல் நாளே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். குக்கரில் 4 முதல் 7 விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பட்டை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து தாளிக்கவும்.
  • இதனை கொண்டைக்கடலையில் சேர்த்து கிளறி ஆவி பறக்க (Sundal) விநாயகருக்கு பரிமாறலாம்.

விநாயகருக்கு பிடித்த பூரணம் கொழுக்கட்டை செய்முறை :

மாவு செய்ய தேவையான பொருட்கள் :

  • பச்சரிசி மாவு
  • சர்க்கரை
  • ஏலக்காய் தூள்
  • பூரணம்

பூரணம் செய்ய தேவையான பொருட்கள் :

  • துருவிய தேங்காய்
  • ஏலக்காய் தூள்
  • நெய்
  • வெல்லப்பாகு
  • கடலைப்பருப்பு

    Vazhai Ilai Kozhukattai (Photo Credit: YouTube)
    Vazhai Ilai Kozhukattai (Photo Credit: YouTube)

செய்முறை :

  • எடுத்துக்கொண்ட அரிசி மாவில் நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் கடலைப்பருப்பை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பூரணம் செய்ய தேவையான வெல்லப்பாகை கரைத்து அதனுடன் கடலை பருப்பு, ஏலக்காய், தேங்காய் துருவல், நெய் சேர்த்து இறக்கி ஆறவிடவும்.
  • அடுத்து மாவை அச்சில் வைத்து அல்லது கைகளால் உருட்டி அதற்கு நடுவில் பூரணம் வைத்து வேக வைத்தால் சுவையான கொழுக்கட்டை தயார். இதனை இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்து விநாயகருக்கு படைத்தும் பரிமாறலாம்.