Cough Cyrup (Photo Credit : Pixabay)

அக்டோபர் 04, சிந்த்வாரா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில்  1 முதல் 7 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்குள் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா நிறுவனம் தயாரித்த கோல்ட் ரிப் (Coldrif) மருந்தும், மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் (Nextro-DS) மருந்தும் சம்பவத்திற்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடந்து மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் சிறுநீரக திசுவில் ரசாயனம் :

குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுநீரகத் திசுவில் டை எத்திலின் கிளைசால் எனும் ரசாயனம் இருந்தது உறுதி செய்யப்படவே, இருமல் மருந்துகளை குழந்தைகள் உட்கொண்டதன் மூலம் குழந்தைகள் உயிரிழந்தனவா?, இருமல் மருந்துகளில் இந்த ரசாயனம் கலந்து இருக்க வாய்ப்புள்ளதா? எனும் கோணத்தில் விசாரணை நடந்து வந்தது. பெயிண்ட் மற்றும் மை ஆகியவை தயாரிக்க டை எத்திலின் ரசாயனம் பயன்படுத்தப்படும் நிலையில், அந்த ரசாயனத்தால் பாதிப்பா? எனவும் சந்தேகிக்கப்பட்டது. Today's Latest News In Tamil: இருமல் மருந்து தடை முதல் சக்தி புயலின் தாக்கம் வரை.. இன்றைய முக்கிய செய்திகள்.!

கோல்ட் ரிப் மருந்துக்கு தடை :

இதனிடையே மத்திய அரசு பல் துறை விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. அதன்படி உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான தினேஷ்குமார் மவுரியா, ஸ்ரீசென் பார்மா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 13 பேட்ச் கோல்ட் ரிப் மருந்தை சோதனைக்கு உட்படுத்துமாறு தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்திற்கு கடிதம் அனுப்பியதை தொடர்ந்து 12 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் மறு உத்தரவு வரும் வரை கோல்ட் ரிப் மருந்தின் விற்பனை தமிழகம் முழுவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை விளக்கம் :

இந்த நிலையில் இருமல் மருந்தின் ஆய்வு அறிக்கையில் சிறுநீரகத்தை பாதிக்கும் ரசாயனம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த குழந்தையில் ஒருவருக்கு லெப்டோஸ்பிரோசிஸ் என்ற விலங்குகளால் பரவும் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்து மரணத்திற்கு காரணம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கக்கூடாது எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது. ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சோதிக்க வேண்டும் என்றும், சுயமாக மருந்து வாங்கி எந்த விதமான அலட்சியமான முயற்சியும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.