ஜூலை 16, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 மாத குழந்தை இருக்கின்றனர். குழந்தைக்கு சமீப காலமாகவே அடிக்கடி உடல் நலக்குறைபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஜூலை 13 ஆம் தேதி குழந்தை மீண்டும் சளியால் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிலேயே சரிசெய்ய முயற்சி செய்துள்ளனர். சம்பவத்தன்று குழந்தையின் மூக்கில் கற்பூரத்தை குழைத்து, தைலம் சேர்ந்து அவரது தாய் தடவியுள்ளார். இதன் காரணமாக குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படவே, என்ன செய்வதென்று தெரியாமல் பெற்றோர் திகைத்துள்ளனர்.
மூச்சுத்திணறி உயிரிழந்த குழந்தை :
இதன் பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 16) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். கும்பகோணம் பள்ளி தீ விபத்து.. பிஞ்சுகளின் புகைப்படங்களை கண்டு கதறியழும் பெண்மணி.!
மருத்துவர்கள் வலியுறுத்தல் :
மேலும் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டால் வீட்டு வைத்திய முறைகளை கையாளாமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என மருத்துவர்கள் தரப்பில் வலியுறுத்தியுள்ளனர். குழந்தையின் இறப்பிற்கான உறுதியான காரணம் இதுவரை தெரியாததால் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின் தெரியவரும் என காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர். சாதாரண சளி என்பதால் தாய் வீட்டிலேயே சரி செய்துவிடலாம் என எண்ணியது குழந்தைக்கு எமனாக மாறி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.