மே 16, நாகர்கோவில் (Kanyakumari News Today): அக்னி நட்சத்திரம் தொடங்கியதிலிருந்து கோடை வெயிலின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயில் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதிக்குள்ளாகும் நிலையில், அனல் காற்றும் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில் கோடை வெப்பத்தால் திருத்துவபுரத்தில் அடுத்தடுத்து மூவர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடல் சூட்டால் பாதிக்கப்பட்டவர் மரணம் :
திருத்துவபுரத்தை சேர்ந்தவர் மனோஜெயன் (வயது 47). இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடல் சூட்டால் (Heat Stroke) பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தை இருக்கும் நிலையில் இச்சம்பவம் அவரது குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது.
வெப்ப பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு :
இதனை தொடர்ந்து திருத்துவபுரம் வடக்கு வெள்ளச்சிமாவிளையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கலைமணியும் (வயது 47) உயிரிழந்துள்ளார். இவர் தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கடுமையான உடல் வெப்பத்தால் (Summer Heat) அவதிப்பட்டுள்ளார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். Cuddalore News: பத்தாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண்.. மாணவி தற்கொலை.. கதறியழும் குடும்பம்.!
வெயிலால் உடல்நல பாதிப்பு :
அதே பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சந்தோஷ் என்பவரும் வெயிலின் காரணமாக கடந்த 14 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் மதிய நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயில் பாதிப்பு அபாயம் :
குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் வெப்ப தாக்கத்தால் (Heat Wave) பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் அவசியமான நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயில் தொடரும் என்று முன்பே வானிலை ஆய்வு மையம் கூறியதற்கேற்ப வெப்ப பாதிப்பு அதிகரித்துள்ளதால் மக்கள் அனல் காற்று வீசும் இந்த வெப்ப காலத்தில் முடிந்தளவு வீட்டிலேயே இருப்பது அவசியம்.