செப்டம்பர் 12, சென்னை (Chennai News): சென்னை, மதுரை, கோவை, திருச்சி, கன்னியாகுமரி உட்பட தமிழகம் முழுவதும் 25 இடங்களில் போத்தீஸ் ஜவுளி கடை நிறுவனத்திற்கு தொடர்புடைய கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் ஜவுளி விற்பனை கடைகளை வைத்து பிரதானமான அளவில் நடத்திவரும் மிகப்பெரிய நிறுவனம் போத்தீஸ். இந்த நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி உட்பட 25 இடங்களில் அதிரடி சோதனை நடந்து வருகிறது. CP Radhakrishnan: துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்..!
போத்தீஸ் கடையில் சோதனை:
சென்னையில் உள்ள போத்தீஸ் கடை உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகத்திலும் இந்த சோதனை நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் டி.நகர், மாம்பலம் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. முதற்கட்டமாக வரி ஏய்ப்பு தொடர்பான விஷயத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. தீபாவளியை ஒட்டி ஆடை விற்பனைக்கு போத்தீஸ் நிறுவனம் முழுவீச்சில் தயாராகி வரும் நிலையில், தற்போது வருமானவரித்துறை சோதனை நடைபெறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்களின் செல்போன் பறிப்பு:
சோதனை நடைபெறும் இடங்களில் காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு, கடைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஜவுளி எடுக்க வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், கடையில் சோதனையின்போது பணியில் இருந்த ஊழியர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஸ்மார்ட்போனும் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சோதனையின் முடிவில் அதற்கான காரணம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.