Tamil Nadu Energy Secretary Beela Venkatesan IAS Death (Photo Credit : @sakthekrish / @rajbhavan_tn X)

செப்டம்பர் 25, சென்னை (Chennai News): தமிழ்நாடு எரிசக்தி துறையின் முதன்மைச் செயலாளரமாக பணியாற்றி வந்த பீலா வெங்கடேசன் உடல்நலக்குறைவால் நேற்று (செப்டம்பர் 24) மாலை காலமானார். 56 வயதாகும் பீலா வெங்கடேசன் மூளை புற்றுநோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த இரண்டு மாதங்களாகவே சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவிய காலத்தில் சுகாதாரத் துறையின் செயலாளராக பணியாற்றி வந்த அவர் தினமும் செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வழங்கியிருந்தார்.

கொரோனா காலத்தில் மக்கள் பணியாற்றிய பீலா :

மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதன் மூலமாக தமிழக மக்களிடமும் நன்கு அறியப்பட்டார். இவரது மறைவு பிற அரசு அதிகாரிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது தந்தை எல்.என் வெங்கடேசன் தமிழ்நாடு காவல்துறையில் பிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர். தாயார் ராணி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், கடந்த 2006-2011க்கு இடைப்பட்ட காலத்தில் சாத்தான்குளம் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார். இதனால் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் சென்னையில் பிறந்த பீலா வெங்கடேசன் எம்.பி.பி.எஸ் படிப்பு பயின்றுள்ளார். Beela Venkatesan: பீலா வெங்கடேசன் உடலுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.. அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்.! 

ஐஏஎஸ் பீலா வெங்கடேசனின் வாழ்க்கை :

மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் முதல் பட்டப்படிப்பை முடித்துவிட்டு மருத்துவரான அவர் 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் தனது முதல் பணியை தொடங்கியவர் பின் ஜார்கண்டில் பணியாற்றி தமிழ்நாடுக்கு வந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உதவி ஆட்சியராகவும், மீன்வளத்துறை ஆணையராகவும், நகர ஊரமைப்பு ஆணையர், சுகாதாரத்துறை தலைமை செயலாளராக என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். பீலா வெங்கடேசனின் கணவர் ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

உடலை உருக்கிய புற்றுநோயால் பறிபோன உயிர் :

இதனால் கணவருடன் கருத்து வேறுபாடு கொண்டு அவரை பிரிந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு தனது பெயரையும் மாற்றி அறிவித்தார். இந்த நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் மருத்துவ சிகிச்சை காரணமாக பக்க விளைவையும் எதிர்கொண்டுள்ளார். இறக்கும் தருவாயிலும் தனது கடைசி காலத்தில் பல்வேறு உடல்நலப்பிரச்னைகளை எதிர்கொண்டு சிரமப்பட்டுள்ளார். இதனால் நெருங்கிய உறவினர்களை தவிர்த்து வேறு யாரையும் சந்திக்காத நிலையில் உயிர் (Beela Rajesh Death) பிரிந்து விட்டது. இவரது உடல் கொட்டிவாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பீலா வெங்கடேசனின் மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.