மே 26, உதகமண்டலம் (Nilgiris News): தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தன்மை காரணமாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்று கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் மேற்குத்தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டி அமைந்துள்ள நீலகிரி (Nilgiris Rains Today), கோவை (Coimbatore Rains Today) மாவட்டங்களில் மிககனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் மலைப்பகுதிகள், தேனி, குமரி, தென்காசியில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிககனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை: இன்று பொளந்துகட்டப்போகும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு இந்த மாவட்டங்கள் உஷார்.!
24 மணிநேரத்தில் அதிக கனமழை பதிவு:
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி அவலாஞ்சியில் 35 சென்டிமீட்டர் கனமழை கொட்டித்தீர்த்துள்ளது. கோவை (Kovai Rains) சின்னகல்லாரில் 21 செமீ மழை, மேல் பவானியில் 29 சென்டிமீட்டர் மழை, கூடலூரில் 15 சென்டிமீட்டர் மழை, பந்தலூரில் 13 சென்டிமீட்டர் மழை, சின்னக்கல்லாரில் 21 சென்டிமீட்டர் மழை, வால்பாறையில் 11 சென்டிமீட்டர் மழை, சோலையாரில் 10 செமீ மழை, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 13 க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று கனமழை பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றும் கனமழை:
அதேநேரத்தில், இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ள காரணத்தால், குற்றாலம் அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பவானி ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கரையோர மக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.