Chennai Woman Dies After Allergic Reaction (Photo Credit : Wikipedia / Youtube)

செப்டம்பர் 02, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள ஆவடி, கண்ணப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, இரண்டு மகள்கள் இருக்கின்றனர். தம்பதியின் மூத்த மகள் ஷர்மிளா (வயது 19). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வழக்கம் போல இரவில் உறங்கியவர் ஆகஸ்ட் 29-ஆம் தேதி காலை எழுந்தபோது உடலில் அரிப்பு தென்பட்டுள்ளது. இதனால் அரிப்பு ஏற்பட்ட பகுதியில் சொரிந்து வீக்கம் ஏற்பட்ட நிலையில், வீட்டில் இருக்கும் மஞ்சளை உடல் முழுவதும் பூசிக்கொண்டதாக தெரிய வருகிறது.

வாயில் நுரை தள்ளி மயக்கம் :

இதன்பின் குளிக்க சென்றவர் வாயில் நுரை தள்ளி மயங்கி உள்ளார். இதனை எடுத்து மகளை மீட்ட பெற்றோர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவேற்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு ஒரு நாள் சிகிச்சையில் இருந்தவர் மீண்டும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். Chennai: மூடப்படாத மழைநீர் கால்வாயில் விழுந்து பெண் உயிரிழப்பு?.. கொந்தளிக்கும் மக்கள்.. உண்மையில் நடந்தது என்ன?.! 

சிகிச்சை பலனின்றி மரணம் :

இந்த விஷயம் குறித்த தகவலறிந்த ஆவடி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஷர்மிளாவின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இதே போல விஷப்பூச்சி ஒன்று கடிக்கப்பட்டு அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். பின் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் தேறி வந்துள்ளார். இதனிடையே அதேபோல ஒரு விஷப்பூச்சி கடித்து ஷர்மிளா உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கும் அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

மருத்துவர் கூறுவது என்ன?

இந்த விஷயம் குறித்து சித்த மருத்துவர் அபிராமி தெரிவிக்கையில், "அலர்ஜி மற்றும் ஒவ்வாமை போன்றவை சிலருக்கு உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவர்களுக்கு இது லேசான அறிகுறியுடன் சரியாகிவிடும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூச்சு திணறல், மாரடைப்பு அபாயம் போன்றவையும் ஏற்படும். விஷக்கடி ஏற்பட்டால் மஞ்சள் பூசக்கூடாது. சின்ன வெங்காயம் அரைத்து வைக்கலாம் அல்லது சுண்ணாம்பு போன்றவற்றை வைக்கலாம்.

தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்லவும் :

அதிக இடங்களில் விஷக்கடி அடையாளம் தென்பட்டால் தாமதம் இன்றி மருத்துவமனைக்கு செல்வது நல்லது. தாமதமாக மருத்துவமனைக்கு சென்றாலோ அல்லது அதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டாலோ கட்டாயமாக விபரீதம் ஏற்படும். ஆகையால் விஷக்கடி தொடர்பான சந்தேகம் இருந்தால் அது சிறிய அளவு இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்று சோதித்து கொள்வது நல்லது" என தெரிவித்தார்.