Chennai Metro Rail (Photo Credit: @cmrlofficial X)

ஜனவரி 23, சென்னை (Chennai News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து (Team England) கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் (IND Vs ENG T20i Series 2025), 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் (IND Vs ENG ODI Series 2025) கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் டி20 பிரிவில் முதல் ஆட்டம் மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி, ஓடிடியில் டிஸ்னி ஹாட் ஸ்டார் (Disney Hotstar) பக்கங்களில் நேரலையில் பார்க்கலாம். இரண்டாவது டி20 ஆட்டம் சென்னையில் உள்ள சேப்பாக்கம், மா. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. டிக்கெட்டுகள் முன்னதாகவே விற்பனை செய்யப்பட்டுவிட்டது.

சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு:

இதனிடையே, சேப்பாக்கம் வந்து கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும் ரசிகர்களுக்காக, சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான தகவலில், ஜனவரி 25, 2025 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் இந்தியா vs இங்கிலாந்து T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ இரயில்சேவை நீட்டிப்பு செய்யப்பட்டது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் (TNCA) இணைந்து, ஜனவரி 25, 2025 அன்று எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து T20 சர்வதேச கிரிக்கெட் போட்டியைப்பார்வையிட வருபவர்களுக்கு தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக மெட்ரோ இரயில் சேவையை நீட்டித்துள்ளது. Mines Ministry: அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! 

நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவைகள்:

கடைசி மெட்ரோ இரயில்: அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில்நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமானநிலையம் மெட்ரோ இரயில் நிலையம் வரை செல்லும் கடைசிமெட்ரோ இரயில் இரவு 12:00 மணிக்கு புறப்படும்.

பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில்நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் (ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம், புரட்சித்தலைவிடாக்டர். ஜெ. ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் கோபுரம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா, எழும்பூர்) புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் (நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்துகொள்ளலாம்.

பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் (நடைமேடை 3) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.

பயணிகள் கடைசி மெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஸ்பான்சர் செய்யப்பட்ட மெட்ரோ பயணம்:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் போட்டிக்கான பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மெட்ரோ பயணங்களை ஸ்பான்சர் செய்கிறது.

• கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்திபோட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திற்கு இடையிலான சுற்றுபயணத்தினை மேற்கொள்ளலாம்.

• டிஜிட்டல் மற்றும் அச்சிடப்பட்ட நுழைவு பயணச்சீட்டுகள் இரண்டும் தனித்துவமான QR குறியீடுகளைக் கொண்டுள்ளன, இதை பயன்படுத்தி மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம்.

• கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை வைத்திருப்பவர்கள் ஜனவரி 25, 2025 அன்று ஒரு சுற்றுப்பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.

வாகன நிறுத்துமிடம்:

பயணிகளின் வசதிக்காக அனைத்து மெட்ரோ இரயில் நிலையங்களிலும் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன. நிலையான வாகன நிறுத்தம் கட்டணம் பொருந்தும். மெட்ரோ சேவைகளை பயன்படுத்துவதற்கு பங்கேற்பாளர்கள் தங்கள் நுழைவுச்சீட்டுகளை பாதுகாப்பாகக்கையாளவும் அல்லது டிஜிட்டல் QR குறியீடு பயணச்சீட்டுகளைதங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் எளிதான பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன.

மெட்ரோ இரயில் சேவை நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு: