ஜூலை 08, செம்மங்குப்பம் (Cuddalore Accident News): கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி பயணம் செய்த பயணிகள் ரயில், தனியார் பள்ளி பேருந்து மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. காலை 7:45 மணியளவில் கிருஷ்ணசாமி என்ற தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் ஆலம்பாக்கம் பகுதியில் ரயில்வே கிராஸிங் தாண்டி செல்லும்போது இந்த விபத்து நேர்ந்தது. விபத்தில் பள்ளி பேருந்தில் பயணம் செய்த 10 ஆம் வகுப்பு மாணவர் செழியன் (வயது 15), 6 ஆம் வகுப்பு மாணவர் நிவாஸ் (வயது 12) , 11 ஆம் வகுப்பு மாணவி சாருமதி (வயது 16) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அக்கா - தம்பி பலி :
இதில் சிறுவன் நிவாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், மாணவி சாருமதி கடலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த செழியன் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாணவனின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் சாருமதி மற்றும் செழியன் ஆகியோர் அக்கா, தம்பி என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தகவலறிந்த மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஆட்சியர், ரயில்வே அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். Gold Rate Today: படிப்படியாக உயரும் தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் உள்ளே.!
விபத்துக்கு காரணம் யார்? - கேட் கீப்பரா? ஓட்டுனரா?
முதற்கட்ட விசாரணையில் கேட் கீப்பர் கேட்டை திறந்து வைத்திருந்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டது. தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்துவரும் நிலையில், தெற்கு ரயில்வே சார்பில் "பள்ளி பேருந்து ஓட்டுநர் நேரமாகிவிட்டதால் கேட்டை திறக்க சொன்னதாகவும், அதன் பேரில் கேட் கீப்பர் கேட்டை திறந்தது விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது" என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் உள்ளூர் மக்கள் விபத்து குறித்து கூறுகையில், "கேட்டை திறக்க சொல்லி யாரும் சொல்லவில்லை. கேட் கீப்பர் உறங்கிக்கொண்டிருந்தார். கேட் பூட்டப்படாமல் திறந்து இருந்ததே விபத்துக்கு காரணம்" என தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு :
இதனால் தவறு யார் மீது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே சார்பிலும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், படுகாயமடைந்துள்ள நபர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது சர்ச்சை செயலியில் ஈடுபட்ட கேட் கீப்பர் பங்கஜ் ஷர்மா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீரமைப்பு பணிகள் தீவிரம் :
இதுவரை விபத்துக்கு காரணம் என்ன? என்பது குறித்து உரிய தகவல் கிடைக்காததால் குழப்பம் நீடித்து வருகிறது. விபத்துக்கு கேட் கீப்பர் தான் காரணம் என உள்ளூர் மக்களால் பங்கஜ் தாக்கப்பட்ட நிலையில், தற்போது நிகழ்விடத்தில் மீட்பு பணிகளும், ரயில் வழித்தடத்தை சரி செய்யும் பணிகளும் நடந்து வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் விபத்தைக்கண்டு மாணவர்களை மீட்க வந்த 3 பேரை மின்சாரம் தாக்கியதாகவும் உள்ளூர் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது .
3 பேர் மீது மின்சாரம் தாக்கியதா?
பள்ளி வாகனம் மீது ரயில் மோதியதை கண்டு பதறிய அண்ணாதுரை என்பவர் அவர்களை மீட்க சென்ற வழியில் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஒருவர் மட்டும் மின்சாரம் தாக்கி காயமடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் தரப்பில் மேலும் இருவர் மீதும் மின்சாரம் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. ரயிலில் பயணித்த இருவர் விபத்தைக்கண்டு பதறி மீட்க சென்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியதாக உள்ளூர் மக்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பள்ளி வாகன ஓட்டுனரின் வாக்குமூலம் :
இந்த நிலையில் ஓட்டுனரிடம் அமைச்சர் கணேசன் விசாரித்த போது, "ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது. அதன் காரணமாகவே நான் வாகனத்தை இயக்கினேன். ரயில் சென்று விட்டது என நினைத்து பள்ளி வாகனத்தை இயக்கினேன். ரயில்வே கேட்டை திறக்கும் போது கேட் கீப்பர் உட்பட யாரிடமும் நான் பேசவில்லை" என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.