செப்டம்பர் 30, புதுடெல்லி (New Delhi): தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் (TVK Vijay), 2026 சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்குகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அதற்கான அனுமதியையும் பெற்று இருந்தார். விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு மரக்காணத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் த.வெ.க-வின் கொள்கை, கோட்பாடு போன்ற பல்வேறு விஷயங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. TVK Flag Anthem: "தமிழன் கொடி பறக்குது.." - தவெக கட்சி பாடல் வெளியீடு..!
கொடிக்கு வலுத்த எதிர்ப்பு:
இதனிடையே, த.வெ.க கொடி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்ற யானை படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சார்பிலும், கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் சார்பிலும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏனெனில், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கொடியில், யானையே முக்கிய அம்சமாக இடம்பெற்று இருக்கும். அதேபோல, கேரளா மாநில அரசின் சின்னத்திலும் யானை இருக்கும். இதனால் த.வெ.க கொடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையம் பதில்:
பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனுவும் வழங்கப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், "தமிழக வெற்றிக் கழக கொடிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அரசியல் கட்சிகளின் கொடிகள், அதில் இடம்பெற்றுள்ள உருவங்களுக்கு / சின்னங்களுக்கு அங்கீகாரம் போன்றவற்றை தேர்தல் ஆணையம் கொடுப்பதில்லை. கொடிகள் விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதை சம்பந்தப்பட்ட கட்சிகள் உறுதி செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளது. இதனால் விஜயின் கட்சிக் கொடிக்கு எவ்வித சிக்கலும் இல்லை. இந்த தகவல் த.வெ.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.