MTC Bus Conductor J Jagan Kumar (Photo Credit: @Crime_Selvaraj X)

அக்டோபர் 25, அமிஞ்சிக்கரை (Chennai News): சென்னையில் உள்ள மாநகர பேருந்தில் (MTC Conductor Kills), நடத்துனராக வேலை பார்த்து வருபவர் ஜெகன். இவர் எம்.கே.பி நகர் - கோயம்பேடு வரை இயக்கப்படும் தடம் எண் 46G பேருந்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த பேருந்தில் நேற்று இரவு மதுபோதை ஆசாமி ஒருவர் ஏறி இருக்கிறார். அவரிடம் நடத்துனர் டிக்கெட் கேட்டபோது, போதை ஆசாமி - நடத்துனர் இடையே வாக்குவாதம் உண்டாகியுள்ளது.

மயங்கி விழுந்த நடத்துனர்:

இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் ஒருகட்டத்தில் தனது கையில் இருந்த டிக்கெட் வழங்கும் இயந்திரம் கொண்டு போதை ஆசாமியை தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்துள்ளது. இதனால் கடும் ஆத்திரம்கொண்ட போதை ஆசாமி, நடத்துனர் ஜெகன் குமாரை சரமாரியாக தாக்கி இருக்கிறார். தாக்குதல் சம்பவத்தில் நடத்துனர் பேருந்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

மரணம் உறுதி:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறவே, பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தினார். பின் அவசர ஊர்தி உதவியுடன் இருவரும் மீட்கப்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஜெகன் குமார் சிகிச்சை பழநின்ற உயிரிழந்த நிலையில், போதை ஆசாமிக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், போதை ஆசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். 

Murder | crime file pic (Photo Credit: pixabay)
Murder | crime file pic (Photo Credit: pixabay)

போதையில் பயணம்:

விசாரணையில், அமிஞ்சிகரையில் பேருந்தில் ஏறிய போதை ஆசாமி கோவிந்தனுக்கும், சைதாப்பேட்டை லிட்டில் மவுண்ட் பகுதியில் வசித்து வரும் நடத்துனர் ஜெகன் குமாருக்கும் (வயது 52) இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது தெரியவந்தது. நேற்று இரவு சுமார் 07:30 மணிக்கு மேல், முல்லை நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 30 பயணிகளுடன் மாநகர அரசு பேருந்து புறப்பட்டுள்ளது. அமிஞ்சிக்கரை அண்ணா நகர் வளைவில், போதை ஆசாமி வாகனத்தில் எறியுள்ளார்.

நடத்துனர் - பயணி அடிதடி:

அவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் கிராமத்தில் வசித்து வரும் வி. கோவிந்தன் (வயது 53) என அடையாளம் காணப்பட்டுள்ளார். கோவிந்தனிடம் பேருந்தின் நடத்துனர் ஜெகன் குமார், பேருந்தின் பின்புறத்தில் அமர்ந்துகொண்டு டிக்கெட் வாங்கசொன்னபோது, போதை பயணி - நடத்துனர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் டிக்கெட் வழங்கும் கருவியை கொண்டு பயணி தாக்கப்பட்ட, ஆத்திரமடைந்த பயணி நடத்துனரை அடித்துள்ளார். இருதரப்பு மோதலில் படுகாயமடைந்த நடத்துனர் ஜெகன் குமார் உயிரிழந்தார். பயணி அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினார்.

குற்றவாளி கைது:

விசாரணைக்கு பின்னர் காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு இருந்த கோவிந்தனை கைது செய்தனர். அவரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடத்துனர் கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக நேற்று மாநகர பேருந்து சேவை பாதித்தது. மேலும், ஆங்காங்கே பேருந்துகள் நேற்று இரவில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.