ஆகஸ்ட் 13, டிபி சத்திரம் (Chennai News): பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பின்னர், சரித்திர குற்றப்பதிவேட்டில் இருந்து, தலைமறைவாக உள்ள ரௌடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து, அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை அதிகாரிகள், தலைமறைவாக உள்ள ரௌடிகளை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பழிவாங்கும் கொலை எண்ணிக்கையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விசாரணைக்கு சென்ற இடத்தில் சம்பவம்:
அந்த வகையில், பிரபல ரௌடியான மதுரை பாலா என்பவரின் கூட்டாளி ரோஹித்தை, சென்னை தனிப்படை காவல்துறையினர் தேனியில் வைத்து நேற்று கைது செய்தனர். இவரை சென்னை அழைத்துவந்த அதிகாரிகள், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின்பேரில், டிபி சத்திரம் பகுதியில் இருக்கும் கல்லறையில், ரோஹித் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்யவும், விசாரணைக்காகவும் காவல்துறையினர் சென்று இருந்தனர். TN Govt Bus: சுதந்திர தினம், வார இறுதியை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.!
காவலர் மீது தாக்குதல்:
அங்கு கல்லறையில் இருந்து பயங்கர ஆயுதத்தை காவல் அதிகாரிகளிடம் காண்பித்தவர், திடீரென அதிகாரிகளை தாக்கி தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார். இந்த சம்பவத்தில் கீழ்பாக்கம் தனிப்படை குழுவின் தலைமைக்காவலர் சரவணகுமார் காயமடைந்தார். இதனால் அதிகாரிகள் பாதுகாப்பு கருதி ரோஹித் மீது துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் ரௌடி ரோஹித்தின் வலது காலில் குண்டு பாய்ந்தது. இதில் தடுமாறி விழுந்தவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
காயமடைந்த காவலரும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ரோஹித், மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் கொலையில் தொடர்புடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.