ஜூலை 06, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, சி.புதூரில் வசித்து வருபவர் சின்னபாண்டி (வயது 30). இவர் டேங்கர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பானுப்ரியா. தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், பிரணித் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது. குழந்தைக்கு கடந்த ஜூன் 26 ஆம் தேதி சளி பிடித்ததை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கடையில் பெற்றோர் சளி மருந்து வாங்கி கொடுத்ததாக தெரிய வருகிறது. Namakkal News: மனைவியுடன் ஆர்டிஓ இரயில் முன் பாய்ந்து தற்கொலை.. நாமக்கல்லில் சோகம்.!
கடுமையான உடல்நிலை பாதிப்பு :
இந்த நிலையில் ஜூன் 27ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படவே, அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை வத்தலகுண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை பலனின்றி மரணம் :
இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சளி மருந்து கொடுத்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாத பட்சத்தில் மருத்துவர்களை அணுக வேண்டுமே தவிர கடைகளில் அல்லது மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தை வாங்கிக்கொடுக்க கூடாது என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.