SIPCOT Boiler Blast (Photo Credit: YouTube)

மே 15, முதுநகர் (Cuddalore News): கடலூர் மாவட்டம், சிப்காட்டில் (SIPCOT) ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முதுநகர் அருகே உள்ள குடிகாடு என்ற பகுதியில் தனியார் சாயத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிறுவனத்தில் கழிவுநீரை சேமித்து வைத்து சுத்திகரிக்கும் சுமார் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாய்லர் ஒன்று உள்ளது. இந்நிலையில், இன்று (மே 15) அதிகாலை சுமார் 2:30 மணியளவில் அந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துள்ளது. Ranipet News: ஒரே இரவில் 3 பேர் கொடூர கொலை.. ராணிப்பேட்டையில் பயங்கரம்..!

பாய்லர் வெடித்து விபத்து:

இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்துக் வெளியே வந்தனர். மேலும், பாய்லர் வெடித்த (Boiler Blast) விபத்தில் தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்ததால் அங்கிருந்த வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் பதற்றம் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கண்ணெரிச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சாலை மறியல் போராட்டம்:

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தனியார் தொழிற்சாலையை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் திடீரென கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.