ஜூலை 27, நெய்வேலி (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்.எல்.சி அணுமின் நிலையம், நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நேற்று கையகப்படுத்திய நிலங்களில் கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்டது. ஆனால், அந்நிலங்களில் பயிர்கள் விளைவிக்கப்பட்டு இருந்த நிலையில், அறுவடைக்கு முன்னரே ராட்சத இயந்திரங்கள் கொண்டு கால்வாய்கள் வெட்டப்பட்டன.
இந்நிலையில், விளைநிலத்தில் பயிர்கள் இருக்கும்போதே என்.எல்.சி நிர்வாகம் கால்வாய் வெட்டும் பணியில் ஈடுபட்ட காரணத்தால் ஆத்திரமடைந்த விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து, சில இடங்களில் பேருந்துகளின் கண்ணாடிகளையும் சேதப்படுத்தினர். இதனால் கடலூர் மாவட்டம் முழுவதும் லேசான பதற்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், நேற்று இரவில் மாவட்டத்தில் பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை.
காவல்துறையினரின் பாதுகாப்போடு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல, கிராமப்புற பேருந்துகள் இரவில் கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் கடலூர் நோக்கி வரும் நிலையில், அதற்கு தடை விதிக்கப்பட்டு பேருந்துகள் பணிமனைக்கு திரும்ப உத்தரவிடப்பட்டது. Chicken Podimas: சிக்கனில் சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி?; இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!
தற்போது வரைக்கும் 17க்கும் மேற்பட்ட பேருந்துகளின் கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன என மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலாக மாவட்ட அளவிலான பேருந்துகள் படிப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடலூர் மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. என்.எல்.சி நிறுவனம் கால்வாய் வெட்டும் பணியை அறிந்து நிகழ்விடத்திற்கு வர முயற்சித்த பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் ஆங்காங்கே வழியில் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2006ம் ஆண்டே நிலங்கள் என்.எல்.சி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டன. அவைக்கு நடுவே இன்று கால்வாய் அமைக்கப்பட்டபோது, பயிர்களை சேதப்படுத்தி கால்வாய் அமைக்கப்பட்டதால் ஆத்திரத்தில் விவசாயிகள் சர்ச்சை செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.