ஆகஸ்ட் 06, திருப்பூர் (Tiruppur News): மடத்துக்குளம் பகுதியில் மகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சண்முகவேல் (வயது 52). இவர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் உயிரிழந்த எஸ்.ஐ சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து படுகொலை.. தமிழகமே அதிர்ச்சி.!
காவல் உதவி ஆய்வாளர் படுகொலை :
மேலும் குற்றவாளிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டதாக காவல் நிலையத்திற்கு அழைப்பு வந்துள்ளது. இதன் பெயரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து SSI சண்முகவேலும், ஒரு காவலரும் நிகழ்வு இடத்திற்கு நேரில் சென்றுள்ளனர். தகராறு விஷயத்தில் தொடர்புடைய இருவரையும் அழைத்து சமாதானம் பேசிய நிலையில், அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். இதனால் அதிகாரியும் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார். அப்போது திடீரென காவல் உதவி ஆய்வாளர் மீது ஒருவர் பயங்கரமாக தாக்குதல் நடத்தவே, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
SSI சண்முகவேலின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதல்வர் :
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இதனிடையே உடுமலைப்பேட்டை அருகே கொலை செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேலின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.