செப்டம்பர் 28, சென்னை (Chennai News): இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இன்று நடைபெற்று வரும் அரசியல், பொருளாதாரம், விளையாட்டு, தொழில்நுட்பம், விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முக்கிய அப்டேட்களை சுருக்கமாக தெரிந்துகொள்ளுங்கள். அதன்படி இன்றைய முக்கிய செய்தியாக கரூர் மாநகரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணச் சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி நாடு முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குழந்தைகள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 111 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தேசிய மற்றும் மாநில அரசியல்வாதிகள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய மற்றொரு முக்கிய செய்தியாக ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
கரூர் கூட்ட நெரிசல் மரணம் (Karur Stampede Death Today):
தவெக தலைவர் விஜய் கரூர் மாநகரில் பிரச்சாரம் செய்ய மாலை வந்திருந்தார். நாமக்கல்லில் காலை அவர் பிரச்சாரம் செய்வதாக இருந்த நிலையில், தொண்டர்கள் அளவுக்கு அதிகமாக திரண்டதால் வழிநெடுக வாகனம் மெதுவாக நகர்ந்து மதியத்துக்கு மேல் பிரச்சாரப் பணிகள் தொடங்கின. அதனைத்தொடர்ந்து, கரூர் நகரில் இரவு நேரத்தில் விஜய் பிரச்சாரத்தில் பங்கேற்றிருந்தார். விஜய் பிரச்சாரத்திற்கு பங்கேற்ற இடம் முழுவதும் தொண்டர்கள் குவிந்த காரணத்தால், எங்கும் மக்கள் படையாக திரண்டு இருந்தனர். அப்போது, விஜய் உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே ஒரு இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. அவரின் பேச்சு தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கும்போதே திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டபின் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டதாக நேரில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு குழந்தைகள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 111 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. TVK Karur Stampede: கரூர் துயர சம்பவம்.. உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்த தவெக தலைவர் விஜய்.!
கரூர் தவெக பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு (Tamilnadu Govt Announcement on Karur Tragedy):
நாமக்கல், கரூர் பிரச்சார கூட்டத்தின்போது ஊழல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விஜய் கடுமையாக விமர்சித்து பேசினார். முதல்வர் ஸ்டாலினையும் கண்டித்து இருந்தார். இதனை தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். இதனால் அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க அவசர ஊர்திகள் வந்த வண்ணம் இருந்தன. இதன் பின் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்ததாக தகவல் அறிந்த தமிழ்நாடு முதல்வர் சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். அமைச்சர்கள் குழுவையும் கரூர் அனுப்பி வைத்தார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 இலட்சம் இழப்பீடாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி (IND Vs PAK Asia Cup Final 2025):
துபாயில் ஆசியக்கோப்பை 2025 கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த நிலையில், அதன் இறுதிக்கட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், சவுதி அரேபியா, ஓமன் என பல அணிகள் மோதிய ஆட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் (India Vs Pakistan Cricket Match) இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த போட்டி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் (Dubai International Cricket Stadum) நடைபெறுகிறது. இன்றைய போட்டியின் வெற்றி பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது. IND Vs PAK Asia Cup Final 2025: இந்தியா Vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி.. இந்தியா செய்யப்போவது என்ன?
கரூரில் உண்மையில் நடந்தது என்ன? டிஜிபி அலுவலகம் விளக்கம் :
கரூரில் என்ன நடந்தது என்பது தொடர்பாக டிஜிபி அலுவலகம் அதிகாரப்பூர்வ விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, "பிரச்சார கூட்டத்திற்கு 10,000 பேர் வரை எதிர்பார்ப்பதாகக் கூறி தவெக அனுமதி பெற்றது. இதை முன்னிட்டு முந்தைய கூட்டங்களை கருத்தில் கொண்டு சுமார் 500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என திட்டமிடப்பட்டிருந்தாலும், மதியம் 12 மணிக்கே விஜய் வருவார் என கட்சியினர் அறிவித்தனர். ஆனால் அவர் உண்மையில் இரவு 7:10 மணிக்குத் தான் நிகழ்விடம் வந்தடைந்தார். இதற்கிடையில் காலை 11 மணி முதலே ஆயிரக்கணக்கான மக்கள் அவரை காண திரண்டனர். மேலும் தவெக கோரப்பட்ட உழவர் சந்தை மற்றும் லைட்ஹவுஸ் ரவுண்டானா பகுதிகள் ஒதுக்கப்பட்ட வேலுச்சாமிபுரத்தைவிட குறுகலானவை. விஜய் பேச தொடங்கியபோது காவல்துறை மேற்கொண்ட சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பாராட்டி அவர் நன்றி தெரிவித்துள்ளார்" என டிஜிபி அலுவலகம் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் சம்பவம் - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் :
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் பலியாகிய துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி திரளபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், அன்புமணி ராமதாஸ், சீமான், சரத்குமார், திருமாவேலன், செல்வப்பெருந்தகை, வைகோ மாநில அரசியல் தலைவர்கள் வரை பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் சிறந்த மருத்துவ சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ள இந்தச் சம்பவம் அரசியல், சமூக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரூர் சம்பவம் - தவெக தலைவர் விஜய் அறிக்கை :
சென்னை வீட்டிற்கு சென்ற பின் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன் என பதிவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.