செப்டம்பர் 28, கரூர் (Karur News): கரூர் மாநகரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரண சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி நாடு முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குழந்தைகள் உள்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 111 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தேசிய முதல் மாநில அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றிய நேரத்தில் ஏற்பட்ட மின்சார துண்டிப்பும் கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருந்ததாக நேரில் இருந்தவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கரூர் சம்பவம் - தவெக தலைவர் விஜய் இரங்கல் அறிக்கை :
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் திருச்சி விமான நிலையம் மற்றும் சென்னையில் அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தபோது அவர் பதிலளிக்காமல் சென்றார். இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பின் சென்னை வீட்டிற்கு சென்ற தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதயம் நொறுங்கி இருப்பதாக இரங்கல் தெரிவித்தார். அந்த பதிவில், "இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்" என பதிவிட்டுள்ளார். TVK Campaign Deaths: தவெக விஜய் மக்கள் சந்திப்பில் அசம்பாவிதம்.. பலி எண்ணிக்கை கிடுகிடு உயர்வு.. கரூருக்கு புறப்படும் முதல்வர் ஸ்டாலின்.!
தவெக தலைவர் விஜய் இழப்பீடு அறிவிப்பு :
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில், "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன். நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.
ஈடு செய்ய முடியாத இழப்பு :
என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன். நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.
விரைவில் மீண்டு வர முயற்சிப்போம் - தவெக தலைவர் விஜய் :
அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்.
இளகிய மனம் படைத்தவர்கள் வீடியோவை தவிர்க்கவும்.
கரூர் துயர சம்பவம் தொடர்பான பதறவைக்கும் வீடியோ :
⚠️ Disturbing Visuals ⚠️
வயது முதியவர்கள், பெண்கள் குழந்தைகளும் பலியானதாக தகவல்.#TVK #karur #TVKStampede
— saba🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@Dmk_saba_) September 27, 2025