செப்டம்பர் 28, சென்னை (Chennai News): தொழில்நுட்ப நிறுவனங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே பணி நீக்கம், வேலை இழப்பு போன்ற பிரச்சனைகள் மிகப்பெரிய விவாதங்களை உண்டாக்கி இருக்கிறது. பல்லாயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் கட்டாய பணி நீக்க நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக புகார்களும் எழுந்துள்ளன. குறிப்பாக ஐடி சார்ந்த தொழில்நுட்ப பணிகளில் வேலை பார்ப்போர் வேலையை இழந்து பரிதவிப்பதாகவும், இந்த விஷயம் நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, இன்டெல், ஆரக்கல், சேல்ஸ் போர்ஸ் உட்பட பல நிறுவனங்களிலிருந்து பணி நீக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏஐ தொழில்நுட்பத்தை (AI Technology) அறிமுகம் செய்ததன் வாயிலாக பலருக்கும் வேலை இழப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் பறிபோகும் வேலை :
அந்த வகையில் அக்சென்சர் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அக்சென்சர் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் ஒன்றாகும். இந்நிறுவனம் சர்வதேச அளவில் முன்னணி கன்சல்டிங் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் நேரடியாக 7 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை பார்த்து வரும் நிலையில், கடந்த மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிப்பு மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணி தேவை குறைந்துள்ளதன் காரணமாக இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. Tech Layoffs 2025: அறிகுறியே இல்லாமல் வேலையை விட்டு தூக்கும் நிறுவனங்கள்?.. 204 நிறுவனங்களில் 90,000 ஊழியர்கள் பாதிப்பு.!
ஊழியர்களின் வேலையை பறித்த ஏஐ :
இந்த பணிநீக்கங்களானது 865 மில்லியன் டாலர் மதிப்புள்ள மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் விரைவில் மீண்டும் பணியாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்த பணிநீக்கங்கள் குறித்து அக்சென்சர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜூலி ஸ்வீட் (Julie Sweet) சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "புதிய திறன்களை கற்றுக்கொள்ள முடியாத பணியாளர்களை நாங்கள் விரைவில் வெளியேற்றுகிறோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பணியாளர்களை மாற்றி அமைப்பதே இதன் நோக்கம். செயற்கை நுண்ணறிவு சார்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே இந்த முடிவை எடுத்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் பணிநீக்கம் தொடர வாய்ப்பு :
இதன் காரணமாக ஏஐ தொழில்நுட்பம் போன்ற புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 2025 ஆகஸ்ட் மாத இறுதிவரை அக்சென்சர் நிறுவனத்தின் உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கையானது 7,91,000 ஆக இருந்த நிலையில், மூன்று மாதங்களில் மட்டும் 7,79,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த பணிநீக்க நடவடிக்கையானது 2025 ஆம் ஆண்டான இந்த ஆண்டு தொடக்கம் முதல் வரும் நவம்பர் 2025 வரும் தொடரும் எனவும் கூறப்படுகிறது. இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சேமிக்க முடியும் எனவும், ஏஐ போன்ற புதிய திறன்களை மேம்படுத்துவதில் ஐடி நிறுவனங்கள் அதனை முதலீடு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. TCS Layoff Controversy: 12,000+ ஊழியர்கள் கட்டாய ராஜினாமா.. பணியாளர்களை மிரட்டி வெளியேற்றும் டிசிஎஸ்?
ஐடி நிறுவனங்கள் முடிவு :
மேலும் செயற்கை நுண்ணறிவு (Agentic AI Training) தொடர்பான பயிற்சியையும் தங்களது ஊழியர்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை விரைவில் பூர்த்தி செய்ய முடிவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் காலாண்டை பொறுத்தவரையில் 17.6 பில்லியன் டாலர் வருவாயை அக்சென்சர் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 7% அதிகமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவின் வருகையானது நிறுவனங்களின் செயல்முறையை மாற்றி பணியாளர்களின் திறன்களை புதுப்பிப்பதில் அவசியமாகிறது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப துறையில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு வாடிக்கையாளர்களின் சேவைகளை அதிகப்படுத்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்று ஐடி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன.