Recharge Price Hike (Photo Credit : @TanaysinghT X)

நவம்பர் 09, சென்னை (Technology News): இந்தியாவில் உள்ள மொபைல் நெட்வொர்க்கில் ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு போட்டித்தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 5G ஃபைபர், 5G மோடம் என தங்களது சேவையை தொடர்ந்து மக்களுக்கு விரிவுபடுத்தும் போட்டியில் ஏர்டெல், ஜியோ, வோடபோன் (VI Recharge Price Hike) நிறுவனங்கள் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் 5G சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் வரும் மாதத்திலிருந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 10% முதல் 20% வரை ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளன. OnePlus 15 Series: அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன்.. முழு விபரம் இதோ.!

விரைவில் கட்டண உயர்வு :

இதனால் தற்போது ரூ.239, ரூ.299 இருக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ் மற்றும் டேட்டா விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், மீண்டும் விலை உயர இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் விலை உயர்வு வரும் டிசம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5G சேவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பராமரிப்பு மற்றும் முதலீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதால் வருவாய் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் அதிகாரபூர்வமாக ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனர்கள் அதிர்ச்சி:

சமீப காலமாகவே ஏர்டெல், வோடபோன் மற்றும் ஜியோ நெட்வொர்க் டவுன் காரணமாக பல இன்னல்களை சந்தித்த பயனர்கள், தற்போது மீண்டும் எப்பொழுதும் போல இணைய சேவையை உபயோகித்து வருகின்றனர். சில கிராம பகுதிகளில் தற்போது வரை நெட்வொர்க் பிரச்சனை இருந்து வருகிறது. இது குறித்து முறையிட்ட போதும் 15 நாட்களில் சரியாகிவிடும் என்று வாக்குறுதி அளித்து மீண்டும் பிரச்சனை தொடர்வதாக எக்ஸ் தளத்தில் பயனர்கள் குமுறுகின்றனர். இந்த நேரத்தில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்ற தகவல் வெளியாகி பயனர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.