நவம்பர் 02, ஸ்ரீஹரிகோட்டா (Technology News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது அடுத்த பெரிய விண்வெளி சாதனைக்காக பாகுபலி என பெயரிடப்பட்ட ராக்கெட்டை விண்ணில் ஏவியது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை 05:26 மணியளவில் பாகுபலி என பெயரிடப்பட்ட LVM–3 M5 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் CMS-03 (GSAT-7R) எனும் புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள் புவிவட்ட பரிமாற்ற சுற்றுப்பாதையில் செலுத்தப்பட இருக்கிறது. அதன்படி ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பும் பணி முடிந்த நிலையில், இறுதிக்கட்ட சோதனைகள் மற்றும் செயல்பாடுகள் நிறைவு பெற்று நேற்று கவுண்டவுனும் தொடங்கியது. Amazon India Layoffs: அமேசானில் 14 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்.. இந்தியாவில் 1000 பேர் பாதிப்பு..!
CMS-03 GSAT-7R செயற்கைக்கோளின் சிறப்புகள் (CMS-03 GSAT-7R Satellite Specifications):
LVM–3 M5 ராக்கெட் மூலம் 4400 கிலோ எடை கொண்ட CMS-03 செயற்கைகோள் 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள GTO சுற்றுப்பாதையில் செலுத்தப்பட இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் அடுத்து வரும் 10 ஆண்டுகள் சுற்றுப்பாதையில் செயல்பட்டு இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு வலயம், தீவுகள், வனப்பகுதிகள், தொலைதூர மற்றும் இணைப்பு குறைந்த பகுதிகளுக்கும் இணைய சேவையை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்கைக்கோள் முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய GSAT-7R (CMS-03) செயற்கைக்கோள் இந்தியாவின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு, கடல்சார் கண்காணிப்பு தேவைகளுக்கு முக்கியமானதாக இருக்கும் என விஞ்ஞானிகளும் தெரிவித்துள்ளனர்.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பாகுபலி ராக்கெட் (LVM3-M5 Bahubali Rocket Launched) :
கடந்த 2013 ஆம் ஆண்டு பிரெஞ்சு நாட்டில் உள்ள கயானாவில் இருந்து GSAT-7 செயற்கைக்கோள் வெளிநாட்டு வணிக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு நீண்ட கால இணைய மற்றும் பாதுகாப்பு தொடர்பு சேவைகளை வழங்கி இருந்தது. இப்போது அதன் சேவை காலம் முடிந்துள்ளதால், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய GSAT-7R (CMS-03) செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகையில், இந்த செயற்கைக்கோள் விண்ணில் செயல்பட தொடங்கியதும், இந்தியா தொலைதூர நிலப் பகுதிகளிலும், கடல் பரப்புகளிலும் கூட தடையற்ற இணைய அணுகலை பெறலாம் என தெரிவித்துள்ளனர். இந்த பாகுபலி ராக்கெட் ஏவுதல் வெற்றிகரமாக முடிந்தது இந்திய விண்வெளி வரலாற்றில் மற்றுமொரு சாதனையாக கருதப்படுகிறது.